ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் மாசித் திருவிழா தேரோட்டம்
ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் மாசித் திருவிழா தேரோட்டம் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர்.
தென்திருப்பேரை:
ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் மாசித் திருவிழா தேரோட்டம் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர்.
ஆதிநாதர் ஆழ்வார் கோவில்
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நவதிருப்பதி கோவில்களில் கடைசி தலமான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் மாசித் திருவிழா கடந்த மாதம் 21-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் நம்மாழ்வார் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம், 9-ம் நாளன்று நடந்தது. இதையொட்டி அதிகாலையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் நம்மாழ்வார் தேரில் எழுந்தருளினார்.
தேரோட்டம்
காலை 9.15 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. திரளான பக்தர்கள் பக்தி கோஷங்களை முழங்கியவாறு வடம் பிடித்து தேரை இழுத்தனர். கீழ ரத வீதியில் இருந்து புறப்பட்ட தேரானது 4 ரத வீதிகளிலும் வலம் வந்து காலை 11.30 மணி அளவில் மீண்டும் கோவில் நிலையை வந்தடைந்தது.
விழாவில் முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் ராமகிருஷ்ணன், வ.உ.சி. இளைஞர் பேரவை தலைவர் கோமதிநாயகம், அ.தி.மு.க. முன்னாள் தொகுதி இணை செயலாளர் ராஜப்பா வெங்கடாச்சாரி உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு குளிர்பானம், அன்னதானம் போன்றவற்றை தன்னார்வலர்கள் வழங்கினர்.
இன்று, தெப்ப உற்சவம்
10-ம் நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) இரவில் பெருமாள் தெப்ப உற்சவம் நடக்கிறது. 11-ம் நாளான நாளை (புதன்கிழமை) இரவில் நம்மாழ்வார், ஆச்சாரியார்களுடன் தெப்பத்தில் எழுந்தருளி, வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றார்.
விழாவின் நிறைவு நாளான நாளை மறுநாள் (வியாழக்கிழமை) மதியம் தீர்த்தவாரி நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அலுவலர் பொன்னி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
------