தனிப்பட்ட சுற்றுப்பயணத்தில் அமைச்சரை சந்திக்கும் அரசு அதிகாரி மீது குற்றவியல் நடவடிக்கை-தேர்தல் ஆணையம் எச்சரிக்கை
தனிப்பட்ட சுற்றுப்பயணத்தின்போது அமைச்சரை சந்திக்கும் அரசு அதிகாரி குற்றவாளியாக கருதப்பட்டு, அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.
திருச்சி,
தனிப்பட்ட சுற்றுப்பயணத்தின்போது அமைச்சரை சந்திக்கும் அரசு அதிகாரி குற்றவாளியாக கருதப்பட்டு, அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.
தேர்தல் நடத்தை விதிகள்
தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வேட்புமனு தாக்கல் வருகிற 12-ந்தேதி தொடங்குகிறது. கடந்த 26-ந்தேதி தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான தேதியை இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோராஅதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
அன்றைய தினமே தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து விட்டது. அரசியல் கட்சிகள் பின்பற்றவேண்டிய தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அறிவிக்கப்பட்டுவிட்டன.
இந்நிலையில் அரசு துறை தலைமை அதிகாரிகள் கடைப்பிடிக்கவேண்டிய நடைமுறைகள் பற்றி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதசாகு அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கும் அனுப்பி உள்ள ஒரு சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
படங்கள் அகற்றப்பட வேண்டும்
*அரசு அலுவலகங்களில் உள்ள முதல்- அமைச்சர், பிரதமர் மற்றும் அரசியல் பிரமுகர்கள் படங்களை உடனடியாக அகற்றவேண்டும்.
*மகாத்மா காந்தி, ஜனாதிபதி, கவர்னர், மறைந்த தேச தலைவர்கள், கவிஞர்கள் படங்களை அகற்றக்கூடாது.
* அரசு நலத்திட்ட உதவிகள் எதுவும் வழங்கப்படகூடாது. உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட வாகனங்களை உடனடியாக திரும்ப பெற்று அவற்றை தேர்தல் பணிகளில் பயன்படுத்த ஒதுக்க வேண்டும்.
*பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கட்சி சார்ந்த கொடிகள், பதாகைகள் மற்றும் சுவரொட்டிகளை உடனடியாக அகற்றவேண்டும்.
அமைச்சரை சந்திப்பது குற்றம்
* அரசு அலுவலர்கள் யாரும் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடக்கூடாது.
* எந்த ஒரு அரசு அலுவலரும் கட்சி சார்பாக நேரடியாகவோ, மறைமுகமாகவோ எந்த ஒரு பங்களிப்பையும் செலுத்தக்கூடாது.
* அரசு அலுவலர்கள் கட்சி சம்பந்தமாக பொதுக்கூட்டங்கள் ஊர்வலங்களில் கலந்து கொள்ளக்கூடாது.
* தேர்தல்பணியின்போது எந்த ஒரு அமைச்சரின் தனிப்பட்ட சுற்றுப்பயணத்தின்போது யாரேனும் ஒரு அரசு அலுவலர், அவரை சந்தித்தால் அந்த அரசு அலுவலர் 1951-ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பகுதி 129 (1)ன் படி நடத்தை தவறிய குற்றவாளியாக கருதப்படுவார். மேலும் அவர் மீது குற்றவியல் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்.
* அனைத்து அரசு அதிகாரிகளும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டும்.
* அனைத்து அரசு அதிகாரிகளும் தேர்தல் நேர்மையாகவும், சுமூகமாகவும் நடைபெற ஒத்துழைப்பு நல்கி மாவட்ட நிர்வாகத்திற்கு நற்பெயர் ஈட்டி தரவவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.