கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் பூட்டப்பட்டது

தேர்தல் நடத்தை விதிமுறை அமலானதை தொடர்ந்து கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் பூட்டப்பட்டது.;

Update: 2021-02-28 19:05 GMT
கிணத்துக்கடவு,

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பை தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா கடந்த 26-ந் தேதி மாலை அறிவித்தார். அதனைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன.

இதனையடுத்து கிணத்துக்கடவில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் (எம்.எல்.ஏ. அலுவலகம்) வருவாய் துறையினரால் பூட்டப்பட்டு அதன் சாவி கிணத்துக்கடவு தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

அதேபோல் கிணத்துக்கடவு பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் சுவர்களில் ஒட்டப்பட்டிருந்த அரசியல் கட்சியினர் சுவரொட்டிகள் அனைத்தும் அகற்றப்பட்டன. அதேபால் கோவை-பொள்ளாச்சி மெயின்ரோடு, தோரோடும்வீதி, ஆர்.எஸ்.ரோடு, வைக்கப்பட்டிருந்த விளம்பர பலகைகளும் அகற்றப்பட்டன. 

 மேலும் கிணத்துக்கடவு பஸ் நிலையம் எதிரே இருந்த பல்வேறு அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்களை அரசியல் கட்சியினர் அகற்றாததால் நேற்று காலை கிணத்துக்கடவு பேரூராட்சி பணியாளர்கள் மூலம் அனைத்து கட்சிகளின் கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டன.

கிணத்துக்கடவு பேரூராட்சி கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்ளிட்ட பல அரசு அலுவலங்களில் வைக்கப்பட்டிருந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆகியோரது உருவப்படங்கள் அகற்றப்பட்டன.

இதனை கண்காணிக்கும் பணியில் கிணத்துக்கடவு தாசில்தார் ஸ்ரீதேவி, கிணத்துக்கடவு பேரூராட்சி செயல் அலுவலர் நாகராஜன், கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார், வருவாய்த்துறை ஊழியர்கள் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்