‘அரசியல் கட்சியினர் தனிநபர் குறித்து விமர்சிக்க கூடாது’
தேர்தல் கூட்டங்களில் அரசியல் கட்சியினர் பேசும் போது, தனிநபர் குறித்து விமர்சிக்க கூடாது என்று கலெக்டர் மதுசூதன்ரெட்டி எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
சிவகங்கை,
தேர்தல் கூட்டங்களில் அரசியல் கட்சியினர் பேசும் போது, தனிநபர் குறித்து விமர்சிக்க கூடாது என்று கலெக்டர் மதுசூதன்ரெட்டி எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
ஆலோசனை கூட்டம்
சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. இது தொடர்பாக தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள போலீஸ் அதிகாரிகள் மற்றும் வருவாய்துறை அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை தாங்கினார். போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன் முன்னிலை வகித்தார். இதில் கலெக்டர் பேசியதாவது:-
வழக்குப்பதிவு
தேர்தல் நடத்தை விதிகள் கடந்த முறை இருந்ததை போல் தான் என்றாலும் தற்போது கொரோனா தொற்று பரவல் காரணமாக தேர்தல் ஆணையம் கூடுதலாக சில விதிமுறைகளை அறிவித்துள்ளது. அதன்படி கூட்டங்கள் நடக்கும் போது அனைவரும் முககவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கைகளை சுத்தம் செய்தல் வேண்டும். அத்துடன் அரங்களில் கூட்டம் நடக்கும் போது அதில் கலந்து கொள்பவர்களுக்கு காய்ச்சல் உள்ளதா? என்று பரிசோதனை செய்யவேண்டும்.
சாதி, மத கலவரங்களை தூண்டும் வகையில் பேசக்கூடாது, தனிநபர் விமர்சனம் செய்யக்கூடாது. தனிநபர் வாழ்க்கையை பற்றி பேசக்கூடாது. அவ்வாறு புகார்கள் வந்தால் உடனடியாக விசாரித்து வழக்கு பதிவு செய்யப்படும். மேலும் நடவடிக்கை எடுக்கும் முன்பு வீடியோ குழுவினர் எடுத்த வீடியோவை பார்த்து உறுதி செய்ய வேண்டும்.
மேலும் வேட்பாளர்களின் படம் அச்சடித்த காலண்டர், டைரிகள் மற்றும் ஸ்டிக்கர்களை பயன்படுத்த கூடாது, மேலும் நோட்டீசுகளை அச்சடிக்கும் போது அந்த அச்சகத்தின் பெயர் மற்றும் செல்போன் எண் ஆகியவை நோட்டீசில் அச்சிடப்படவேண்டும் அத்துடன் அச்சக உரிமையாளர்கள் எத்தனை பிரதிகள் அடித்துள்ளார்கள் என்பதை தெரிவிக்க வேண்டும். மேலும் வாக்குசாவடி அருகில் யாரும் ஆயுதங்களை எடுத்து செல்ல கூடாது. பொதுமக்களிடம் வாகன சோதனை செய்யும் போது கண்ணியமாக அவர்களை நடத்தவேண்டும்.பெண் பயணிகளை பெண் போலீசார் கொண்டு சோதனை செய்ய வேண்டும். கொரோனா விதிகளை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்ைக எடுக்க வேண்டும். பணம் பறிமுதல் செய்யும் போது அவர்களிடம் பணத்தை திரும்ப பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரிவிக்க வேண்டும். தேர்தல் விதிகளை அமல்படுத்துவதில் எந்த பிரச்சினை என்றாலும் எங்களிடம் தகவல் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
போலீஸ் சூப்பிரண்டு
கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன் கூறியதாவது.:-
தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். விதிமுறை மீறல் இருந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் நடவடிக்கையில் போலீசாரும், வருவாய் துறையினரும் இணைந்து செயல்பட வேண்டும்.
மாவட்டத்தில் ஏற்கனவே 13 இடங்களில் சோதனை சாவடிகள் உள்ளன. பறக்கும் படையினரை போல் அவர்களும் வாகன சோதனை நடத்துவார்கள். தேர்தல் பணியில் உள்ள அதிகாரிகளுக்கு தேவையான உதவிகளை போலீஸ் நிலையங்களில் செய்து தர வேண்டும். தேர்தல் பொதுக்கூட்டங்கள் நடத்தும் போது 4 தொகுதிகளிலும் நடத்துவதாக இருந்தால் மாவட்ட கலெக்டரிடம் அனுமதி பெற்று கொள்ளலாம். ஒரு தொகுதிக்குள் மட்டும் என்றால் சம்பந்தப்பட்ட தேர்தல் அலுவலரிடம் தான் அனுமதி பெற வேண்டும்.
அனுமதி பெற மனுக்கள் தருவதற்கு வாட்ஸ் அப் மற்றும் இ.மெயில் போன்றவைகளில் தந்தாலும் அவைகளை பெற்று கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். அனுமதி வழங்குவதற்கு கால தாமதம் செய்யக்கூடாது. எந்தவித புகாருக்கும் இடமளிக்காமல் செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கலந்து கொண்டவர்கள்
கூட்டத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முரளிதரன், , மாவட்ட வருவாய் அலுவலர் லதா, வருவாய் கோட்டாட்சியர்கள் முத்துக்கழுவன் (சிவகங்கை), சுரேந்திரன் (தேவகோட்டை), கலால் உதவி ஆணையர் சிந்து, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் .தனலெட்சுமி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ரெத்தினவேல், துணை போலீஸ் சூப்பிரண்டுகள், தாசில்தார்கள்,அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்