பல்லடம் அருகே கரடிவாவியில் லாரி கவிழ்ந்து விபத்து
பல்லடம் அருகே கரடிவாவியில் லாரி கவிழ்ந்து விபத்து
பல்லடம்,
கேரள மாநிலம் கொச்சியிலிருந்து பல்லடம் அருகே உள்ள அனுப்பட்டி தனியார் இரும்பு உருக்காலைக்கு பழைய கியாஸ் சிலிண்டர்கள் உள்ளிட்ட இரும்பு பொருட்கள் லோடு ஏற்றிக்கொண்டு வந்தது, லாரியை பாலக்காட்டைச் சேர்ந்த அப்பாஸ் மகன் செபிக் (வயது 29) என்பவர் ஓட்டி வந்தார். பல்லடம்- செட்டிபாளையம் ரோட்டில், பல்லடம் அருகே உள்ள கரடிவாவி என்ற இடத்தில் வளைவான ரோட்டில் திரும்பும்போது லாரி ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, எதிர்பாராத விதமாக ரோட்டோரம் கவிழ்ந்தது. இதில் ரோட்டோரம் உள்ள மின் கம்பம் மீது மோதி உடைந்தது. இதில் காயம் அடைந்த டிரைவர் பல்லடம் அரசு ஆஸ்பத்திரியில், சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து காமநாயக்கன்பாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து அந்த பகுதி மக்கள் கூறுகையில் இந்த ரோடு வளைவில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது, இங்கு வேகத்தடை அமைக்க வேண்டும், என பலமுறை கூறியும் நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் இந்த பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு உயிர் சேதம் ஏற்படுகிறது எனவே உடனடியாக வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்கள்.