குடிமங்கலம் பகுதியில் இறவைப் பாசனத்தில் நிலக்கடலை சாகுபடி

குடிமங்கலம் பகுதியில் இறவைப் பாசனத்தில் நிலக்கடலை சாகுபடி

Update: 2021-02-28 15:32 GMT
போடிப்பட்டி:-
குடிமங்கலம் பகுதியில் இறவைப் பாசனத்தில் நிலக்கடலை சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மானாவாரி சாகுபடி
குடிமங்கலம் பகுதியின் பிராதன பயிர் சாகுபடியாக தென்னை சாகுபடி உள்ளது.மேலும் வாழை, கரும்பு மற்றும் காய்கறிப் பயிர்கள் சாகுபடியிலும் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த பகுதிகளில் மானாவாரியில் மக்காச்சோளம் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. அத்துடன் சோளம், கம்பு, கொண்டைக்கடலை, மல்லி மற்றும் நிலக்கடலை உள்ளிட்ட பயிர்களும் மானாவாரியில் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த நிலையில் தற்போது நிலக்கடலைக்கு நல்ல விலை கிடைத்து வருவதால் குடிமங்கலம் பகுதி விவசாயிகள் இறவைப்பாசனத்தில் நிலக்கடலை சாகுபடி செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
சமீப காலங்களாக எண்ணெய் வித்துப்பயிர்களான எள், சூரியகாந்தி, நிலக்கடலை போன்றவை சாகுபடி செய்வதில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டுவதில்லை.இதனால் அவற்றின் வரத்து குறைந்து நல்ல விலை கிடைக்கும் சூழல் நிலவுகிறது.எனவே நிலக்கடலை சாகுபடி மேற்கொண்டுள்ளோம்.
நல்ல விலை
செம்மண் பூமியில் நிலக்கடலை நல்ல மகசூல் தரக்கூடியதாகும். ஏக்கருக்கு 50 கிலோ அளவுக்கு விதைகள் தேவைப்படுகிறது. விதைப்புக்கு முன் சூடோமோனாஸ் அல்லது டிரைகோடிரம்மா கொண்டு விதை நேர்த்தி செய்து விதைக்கும் போது விதை முளைப்புத்திறன் அதிகரிப்பதுடன் பூச்சி மற்றும் நோய்த் தாக்குதல் குறைகிறது. விதைத்த 5 நாட்கள் வரை உயிர்த்தண்ணீர் விட வேண்டும். அதன்பிறகு ஈரப்பதத்தைப்பொறுத்து வாரம் ஒரு நாள் தண்ணீர் பாய்ச்சினால் போதுமானது.மேலும் களைகளை முறையாகக் கட்டுப்படுத்துவது
மகசூலை அதிகரிக்க உதவுகிறது. அத்துடன் சரியான பருவத்தில் மண் அணைக்க வேண்டியதும் முக்கியமானதாகும். ஆனால் கூலி ஆட்கள் பட்றாக்குறை பிரச்சினையாகவே உள்ளது. மேலும் இலைப்பேன், அசுவினி, வெட்டுப்புழு, சுருள் பூச்சி, சிவப்புக் கம்பளிப்புழு மற்றும் வேரழுகல் நோய் தாக்காமல் பராமரிக்க வேண்டியது அவசியமாகிறது. இவ்வாறு முறையாக பராமரித்தால் ஏக்கருக்கு 600 கிலோ வரை மகசூல் பெற முடியும்.
இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

மேலும் செய்திகள்