உடுமலை பகுதியில் நேற்று காலையில் கடும் மூடுபனி
உடுமலை பகுதியில் நேற்று காலையில் கடும் மூடுபனி
தளி:-
உடுமலை பகுதியில் நேற்று காலையில் கடும் மூடுபனி ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிக்கு உள்ளானார்கள்.
பல்வேறு பருவங்கள்
இயற்கையின் படைப்பில் முன்பனிகாலம், பின்பனிகாலம், இளவேனிற்காலம், கோடைகாலம், கார் காலம், இலையுதிர் காலம் உள்ளிட்ட பல்வேறு பருவங்கள் சுழற்சிமுறையில் வந்து செல்கின்றன. ஒவ்வொரு பருவமும் ஒவ்வொரு குணத்தை கொண்டிருந்தாலும் உடலில் ஏற்படுகின்ற வாயு, பித்தம், கபம் உள்ளிட்டவற்றை சீரமைப்பதில் ஒன்றிணைந்து செயல்படுகின்றன. இதனால் நோய் நொடியில்லாமல் உயிர் வாழ்வதற்கு உண்டான சத்துகள் இயற்கையாவே உடலுக்கு கிடைத்து விடுகிறது.
சூரியன் வெப்பத்தை அளிப்பதும் சந்திரன் குளுமையை தருவதும் இயற்கையின் நியதியாகும். இயற்கை நமக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அன்றாடம் தொய்வில்லாமல் தன்னலத்தோடு செய்து வருகிறது. பருவத்தே பெய்யும் மழையும் மாசில்லா காற்றும் பாரம்பரியமிக்க உணவுகளும் உடலுக்கு காலங்காலமாக ஆரோக்கியத்தை அளித்து வருகிறது. கடும் வெயிலுக்கும், பசிக்கும், தாகத்திற்கும் தாக்குப்பிடிக்கும் நாம் சிறுமழை மற்றும் பனித்துளிக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் வீடுகளில் முடங்கி விடுகிறோம்.
வெப்பத்தின் தாக்குதல்...
பருவத்திற்கு ஏற்ற உணவுகளை எடுத்துக் கொண்டு ஆரோக்கியமாக வாழ்வதற்கு நாம் கற்றுக்கொண்டால் நோய்நொடி இல்லாத வாழ்வை பெறலாம் என்பதே பருவங்கள் நமக்கு உணர்த்தும் மொழியாகும். தற்போது இலையுதிர் காலம் தொடங்கி உள்ளதால் மரங்கள் இலைகளை உதிர்த்து வருகிறது. இதனால் கடந்த சில நாட்களாக உடுமலையின் சுற்றுவட்டார பகுதியில் வெப்பத்தின் தாக்குதல் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வந்தனர்.
இந்த சூழலில் நேற்றுகாலை உடுமலை சுற்றுப்புற பகுதியில் கடும் மூடுபனி ஏற்பட்டது. இதனால் சுமார் 20 அடி தூரத்தில் இருந்த வாகனங்களையும், பொதுமக்களையும் அடையாளம் காண முடியாத சூழல் நிலவியது. இதனால் பொதுமக்கள் வீடுகளில் முடங்கியதுடன் சாலையில் செல்கின்ற இருசக்கர வாகன ஓட்டிகளும் அவதிக்கு உள்ளானார்கள்.முகப்பு விளக்குகளை எரியவிட்டு சென்றனர்.
மூடுபனி
நேற்று ஏற்பட்ட மூடு பனியை இளைஞர்கள் வீடியோ, புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டதுடன் உறவினர்கள் நண்பகளுக்கு பகிர்ந்து மகிழ்ந்தனர். இனி வைகாசி மாதம் வரையிலும் தொடர்ந்து கோடை காலமே இருக்கும் என்பதால் அனைத்து பொதுமக்களும் உணவிலும் ஆரோக்கியத்திலும் அக்கறை செலுத்தி அதிகளவு பழங்களை, பழச்சாறு மற்றும் தண்ணீர் எடுத்துக் கொண்டு நோய் நொடி இல்லாமல் வாழ்வதற்கு முயற்சிக்க வேண்டும்.