களக்காடு, முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி நிறைவு

களக்காடு மற்றும் முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி நிறைவடைந்தது.;

Update: 2021-02-27 22:21 GMT
களக்காடு:
களக்காடு மற்றும் முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி நிறைவடைந்தது. 

வனவிலங்குகள் 

களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள புலிகள் காப்பகத்தில் வாழும் வன விலங்குகள் குறித்து ஆண்டுதோறும் கணக்கெடுப்பு நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு பருவமழைக்கு பிந்தைய கணக்கெடுப்பு பணி கடந்த 21-ந் தேதி தொடங்கியது. இந்த பணியில் 40 தன்னார்வலர்கள், 60 வனத்துறை ஊழியர்கள் ஈடுபட்டனர். இவர்கள் 21 குழுக்களாக பிரிக்கப்பட்டு, களக்காடு வனச்சரகத்தில் 8 குழுவினரும், திருக்குறுங்குடி வனச்சரகத்தில் 8 குழுவினரும், கோதையாறு வனச்சரகத்தில் 5 குழுவினரும் கணக்கெடுப்பு பணியை நடத்தினர். இந்த பணிகளை களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் அன்பு தொடங்கி வைத்தார்.

கணக்கெடுப்பு குழுவினர் வனவிலங்குகளை நேரில் காண்பது, அவைகளின் எச்சங்கள், கால்தடங்களை சேகரித்தல் போன்ற முறைகளில் கணக்கெடுப்பு நடத்தினர். அப்போது புலி, சிறுத்தை, கரடி போன்ற வனவிலங்குகளின் கால்தடங்கள், எச்சங்கள் சேகரிக்கப்பட்டன. கணக்கெடுப்பு பணிகள் நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து குழுவினர் தாங்கள் சேகரித்த கால்தடங்கள், எச்சங்களை களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். அவை ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. அதன்பிறகு வனவிலங்குகளின் எண்ணிக்கை குறித்து தேசிய புலிகள் ஆணையம் அறிவிக்கும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர். 

முண்டந்துறை

பாபநாசம் முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் ஆண்டுதோறும் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டு பருவமழைக்கு பிந்தைய வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி கடந்த 20-ந்தேதி தொடங்கியது. அம்பை வனக்கோட்டம் சார்பில் நடைபெற்ற இந்த கணக்கெடுப்பு பணியில் அம்பை, கடையம் வனச்சரகங்களில் இருந்து தலா 6 குழுவினரும், பாபநாசம் வனச்சரகத்தில் இருந்து 4 குழுவினரும், முண்டந்துறை வனச்சரகத்தில் இருந்து 13 குழுவினரும் வனவிலங்குகளை கணக்கெடுத்தனர். ஒவ்வொரு குழுவிலும் வன காப்பாளர், வன காவலர்,  வேட்டை தடுப்பு காவலர்கள் 2 பேர், தன்னார்வலர் என 5 பேர் கணக்கெடுப்பு பணி மேற்கொண்டனர். \

அதன்படி முதல் 3 நாட்கள் மறைமுக கணக்கெடுப்பிலும், அடுத்த 3 நாட்கள் நேரடி கணக்கெடுப்பிலும் ஈடுபட்டனர். வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி நேற்று முன்தினத்துடன் நிறைவு பெற்றது. தொடர்ந்து வனவிலங்குகளை கணக்கிட்டு, மத்திய மாநில அரசுகளுக்கு அறிக்கை அனுப்ப உள்ளனர்.

மேலும் செய்திகள்