நெல்லை அறிவியல் மையத்தில் பார்வையாளர்களை கவரும் போர் பயிற்சி விமானம்

நெல்லை அறிவியல் மையத்தில் பார்வையாளர்களை கவரும் வகையில் போர் பயிற்சி விமானம் அமைக்கப்பட்டுள்ளது.

Update: 2021-02-27 21:47 GMT
நெல்லை:
நெல்லை அறிவியல் மையத்தில் பார்வையாளர்களை கவரும் வகையில் போர் பயிற்சி விமானம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் புதுப்பிக்கப்பட்ட டைனோசர் பூங்கா மின்ெனாளியில் ெஜாலிக்கிறது.  

பயிற்சி விமானம்

நெல்லை கொக்கிரகுளத்தில் மாவட்ட அறிவியல் மையம் அமைந்துள்ளது. இந்த அறிவியல் மையத்தின் 34-வது ஆண்டு விழாவின் ஒரு பகுதியாக புதிய காட்சி பொருட்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதாவது இந்திய விமானப்படையின் போர் பயிற்சி விமானம் ஒன்று அறிவியல் மையத்துக்கு கொண்டுவரப்பட்டு அங்கு முகப்பு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதன் திறப்பு விழா நேற்று மாலை நடைபெற்றது. அறிவியல் மைய அலுவலர் முத்துக்குமார் தலைமை தாங்கினார். 

நெல்லை தேசிய மாணவர் படையின் தலைமை அலுவலர் கர்னல் பி.கே.அகுஜா பயிற்சி விமானத்தை பொதுமக்கள் பார்வைக்கு திறந்து வைத்தார். இதில் போபால் இயற்கை வரலாறு மண்டல அருங்காட்சியக முன்னாள் இயக்குனர் சேதுராமலிங்கம் கலந்து கொண்டார். 

டைனோசர் பூங்கா

இதேபோல் அறிவியல் மைய வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த டைனோசர் பூங்காவும் புதுப்பிக்கப்பட்டு ஒலி-ஒளி காட்சியகமாக நேற்று திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கல்வி அலுவலர் மாரி லெனின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.  இதுகுறித்து அறிவியல் மைய அலுவலர் முத்துக்குமார் கூறியதாவது:-

இந்திய விமானப்படையில் ஆரம்பகட்ட பயிற்சிக்கு பெரிதும் பயன்படுத்தப்பட்ட விசிறி வகை விமானமான எச்.ஏ.எல். எஸ்.பி.டி-32 வகையைச் சேர்ந்த விமானம் அறிவியல் மையத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த விமானம் பயிற்சி, கண்காணிப்பு, இரவு நேரத்தில் உளவு பார்த்தல், ஆயுதப்பயிற்சி மற்றும் பல்வேறு வகையான ஆய்வுகளுக்கு பயன்படுத்தப்பட்டது. இதை இந்திய விமானப்படை நெல்லை அறிவியல் மையத்துக்கு வழங்கியுள்ளது. இந்த விமானம் இளம் தலைமுறையினருக்கு தேசப்பற்றை வளர்க்கும் வகையிலும், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி குறித்து அறிந்து கொள்ளும் வகையிலும் காட்சிப்பொருளாக நிறுவப்பட்டுள்ளது. இது பார்வையாளர்களை வெகுவாக கவரும்.

விளக்கம்

மேலும் இங்குள்ள டைனோசர் பூங்காவில் புதிய மின்விளக்குகள் அமைக்கப்பட்டு மின்னொளியில் ஜொலிக்கிறது. அங்கு மாலை நேரத்தில் பார்வையாளர்கள் மேடையில் அமர்ந்து பார்க்கும் வகையிலும், அவர்களுக்கு பழங்கால உயிரினங்கள் குறித்த விளக்கம் அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்