கோபி அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட வாலிபர் விபத்தில் பலி
கோபி அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட வாலிபர் விபத்தில் பரிதாபமாக இறந்தார்.;
கடத்தூர்
கோபி அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட வாலிபர் விபத்தில் பரிதாபமாக இறந்தார்.
வேலையை முடித்துவிட்டு...
கோபி அருகே உள்ள சுண்டக்காம்பாளையத்தை சேர்ந்தவர் பண்ணாரி. அவருடைய மகன் கதிரேசன் (வயது 23). அதே ஊரை சேர்ந்த கந்தன் மகன் சக்திவேல் (20). கதிரேசன் சக்திவேலுடன் பட்டம்பாளையம் என்ற இடத்தில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் 2 பேரும் நேற்று முன்தினம் இரவு பணியை முடித்துவிட்டு நேற்று காலை 6.30 மணி அளவில் மோட்டார்சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். கதிரேசன் மோட்டார்சைக்கிளை ஓட்ட சக்திவேல் பின்னால் உட்கார்ந்து வந்தார்.
விபத்து
சாணார்பாளையம் என்ற இடத்தில் சென்றபோது மோட்டார்சைக்கிளும், எதிரே வந்த வாகனமும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன. விபத்து நடந்ததும் வாகனம் நிற்காமல் அங்கிருந்து சென்றுவிட்டது.
இந்த விபத்தில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் கதிரேசன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். சக்திவேல் படுகாயம் அடைந்தார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் சக்திவேலை மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் கடத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, கதிரேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
திருமணம் நிச்சயிக்கப்பட்டவர்
மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற வாகன டிரைவரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
விபத்தில் பலியான கதிரேசனுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வந்தன. நேற்று உறவினர்கள், நண்பர்களுக்கு திருமண அழைப்பிதழ் கொடுக்க இருந்த நிலையில் கதிரேசன் விபத்தில் இறந்தது உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.