தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்: சேலத்தில் தலைவர்களின் சிலைகள் மறைப்பு கட்சி கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டன
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால், சேலத்தில் தலைவர்களின் சிலைகள் மறைக்கப்பட்டன.
சேலம்:
தமிழக சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. இதையொட்டி சேலத்தில் உள்ள அரசியல் கட்சி தலைவர்களின் சிலைகளை மூடி மறைக்கும் பணியில் அரசு ஊழியர்கள் ஈடுபட்டனர். சேலம் அண்ணா பூங்கா மணிமண்டபத்தில் உள்ள மறைந்த முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது உருவச்சிலைகள் துணியால் மூடி மறைக்கப்பட்டுள்ளன. அதேபோல், 2-வது அக்ரஹாரம் பகுதியில் உள்ள காமராஜர் சிலை, கலெக்டர் அலுவலகம் பகுதியில் உள்ள தந்தை பெரியார் சிலை, மாநகராட்சி அலுவலகம் அருகில் உள்ள ராஜாஜி உள்ளிட்ட முக்கிய தலைவர்களின் சிலைகள் முழுவதும் துணியால் மூடப்பட்டுள்ளது. தொடர்ந்து மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சி கொடிக்கம்பங்களும் அகற்றப்பட்டுள்ளன.