ஏற்காடு மலைப்பாதையில் கார் கவிழ்ந்து விபத்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிர் தப்பினர்
ஏற்காடு மலைப்பாதையில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது
ஏற்காடு:
சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் தஸ்தகீர். இவருடைய மனைவி பர்ஸானா. இவர்களுக்கு முகமதுரயான் (வயது 10) என்ற மகனும், ஆபியா (6) என்ற மகளும் உள்ளனர். தஸ்தகீர் தனது மனைவி, மகன், மகளுடன் ஒரு காரில் சேலம் மாவட்டம் ஏற்காட்டுக்கு நேற்று சுற்றுலா வந்தார். காரை தஸ்தகீர் ஓட்டி வந்தார். ஏற்காடு மலைப்பாதையில் 18-வது கொண்டை ஊசி வளைவில் கார் வந்த போது எதிரே ஒரு மோட்டார் சைக்கிள் வந்தது. அந்த மோட்டார் சைக்கிளில் மோதாமல் இருப்பதற்காக தனது காரை தஸ்தகீர் திருப்பி உள்ளார். அப்போது அவரது கார், கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த பக்கவாட்டு சுவரில் மோதியதுடன், அங்கிருந்த 20 அடி பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்தது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக காரில் இருந்த 4 பேரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். விபத்து குறித்து தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஏற்காடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரகு மற்றும் போலீசார், காயம் அடைந்தவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் ஏற்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கிருந்து ேமல் சிகிச்சைக்காக அவர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து ஏற்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.