மதுரை
மதுரை பகுதியில் அதிகாலையில் நிலவும் கடும் பனிப்பொழிவு காரணமாக வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரிய விட்டப்படி செல்லும் நிலை உள்ளது.
பனிப்பொழிவு
மார்கழி மாதம் பனியின் தாக்கம் அதிகமாக இருக்கும். மாலையில் இருந்தே காலை வரை பனி அதிகமாக இருப்பதை இந்த மாதத்தில் உணர முடியும். பருவநிலை மாற்றத்தின் காரணமாக இந்த மாதம் அதிகமான குளிர் இருக்கும். ஆனால் தை, மாசி மாதங்களில் படிப்படியாக பனிப்்பொழிவு குறைந்து விடும்.
ஆனால் தற்போது மாசி மாதம் பிறந்து, இத்தனை நாட்கள் ஆகியும் மதுரை மாவட்டத்தில் பனியின் தாக்கம் குறையவில்லை. அதிகாலை மற்றும் காலை நேரங்களில் இங்கு நிலவும் கடும் பனிப்பொழிவு, புகை மூட்டம் போன்று காட்சியளித்து வருகிறது.
வாகனங்கள்
இதன் காரணமாக அதிகாலையில் வேலைக்கு செல்பவர்கள் உள்பட அனைத்து வாகன ஓட்டிகளும் முகப்பு விளக்குகளை எரிய விட்டு சென்று கொண்டிருக்கிறார்கள். குளிர்காலம் இன்னமும் முடிவுக்கு வராததால் காலையில் நடைபயிற்சிக்கு சென்று வருகிற முதியவர்கள் பலரும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். குளிரின் தாக்கம் நீடித்து வரும் நிலையில் குளிர்கால ஆடைகள் மற்றும் பொருட்கள் விற்பனையும் அதிகரித்து உள்ளது.