ராகுல்காந்தி நாளை குமரி வருகிறார
தேர்தல் பிரசாரத்துக்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நாளை (திங்கட்கிழமை) குமரி மாவட்டம் வருகிறார். 9 இடங்களில் மக்களை சந்தித்து ஆதரவு திரட்டுகிறார்.
நாகர்கோவில்,
தேர்தல் பிரசாரத்துக்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நாளை (திங்கட்கிழமை) குமரி மாவட்டம் வருகிறார். 9 இடங்களில் மக்களை சந்தித்து ஆதரவு திரட்டுகிறார்.
ராகுல்காந்தி
தமிழக சட்டசபை தேர்தலையொட்டி முதற்கட்டமாக ராகுல்காந்தி கோயம்புத்தூர், திருப்பூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்தார். இதனை தொடர்ந்து 2-வது கட்டமாக தென் தமிழகத்தில் ராகுல்காந்தி பிரசாரம் மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே ஏப்ரல் 6-ந் தேதி தமிழகத்துக்கு தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இத்தகைய பரபரப்புக்கு இடையே நேற்று தூத்துக்குடியில் 2-வது கட்ட பிரசாரத்தை ராகுல்காந்தி தொடங்கினார். தென் மாவட்டங்களில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அவர் இறுதியாக நாளை (திங்கட்கிழமை) குமரி மாவட்டத்தில் பிரசாரத்தை நிறைவு செய்கிறார்.
நாளை வருகிறார்
இதற்காக ராகுல்காந்தி ஹெலிகாப்டர் மூலமாக நாளை காலை கன்னியாகுமரிக்கு வருகிறார். அங்கு அவருக்கு குமரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து கன்னியாகுமரி சர்ச் ரோட்டில் காலை 10 மணிக்கு தனது பிரசாரத்தை தொடங்குகிறார். அங்கு ரோடு ஷோ மூலமாக மக்களை சந்தித்து பேசுகிறார்.
மாணவ-மாணவிகளுடன் சந்திப்பு
பின்னர் 10.45 மணிக்கு அகஸ்தீஸ்வரத்தில் உள்ள முன்னாள் எம்.பி. வசந்தகுமாரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார். 11.30 மணிக்கு நாகர்கோவில் டெரிக் சந்திப்பில் உள்ள இந்திரா காந்தி சிலை முன்பும், 12.30 மணிக்கு தக்கலையில் உள்ள காமராஜர் சிலை முன்பும் மக்களை சந்தித்து பேசுகிறார். மதியம் 1 மணிக்கு முளகுமூடு புனித ஜோசப் மெட்ரிக் பள்ளியில் 9, 10, பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவ, மாணவிகளை சந்தித்து சிறப்புரையாற்றுகிறார்.
2.45 மணிக்கு குளச்சல் பஸ் நிலையம் பகுதியில் உள்ள காமராஜர் சிலை முன்பும், 3.30 மணிக்கு கருங்கல் ராஜீவ்காந்தி சிலை முன்பும் மக்களை சந்தித்து பேச உள்ளார். தேங்காப்பட்டணம் துறைமுகத்தில் மாலை 4 மணிக்கு மீனவர்களை சந்தித்து பேச ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் தேர்தல் நடைமுறையால் மீனவர்களை சந்திக்கும் நிகழ்ச்சி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மீனவர்களுடன் சந்திப்பு
அதற்கு மாறாக பாறகாணி பகுதியில் மீனவர்களை சந்தித்து பேச ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து 5.45 மணிக்கு களியக்காவிளையில் மக்களை சந்தித்து ராகுல்காந்தி பேசுகிறார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக திருவனந்தபுரம் செல்கிறார். ராகுல்காந்தி பிரசாரத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, மேலிட பொறுப்பாளர்கள் தினேஷ் குண்டுராவ், சஞ்சய்தத் மற்றும் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
குமரி மாவட்டம் வருகை தரும் ராகுல்காந்திக்கு உற்சாக வரவேற்பு அளிக்க குமரி மாவட்ட தலைவர்கள் ராஜேஷ்குமார் (மேற்கு), ராதாகிருஷ்ணன் (கிழக்கு) மற்றும் நிர்வாகிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.
ஹெலிகாப்டர் இறங்கும் தளம்
தென்காசியில் இருந்து குமரிக்கு ஹெலிகாப்டர் மூலம் ராகுல்காந்தி வருகிறார். இந்த ஹெலிகாப்டர் கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகையில் இறங்குகிறது. இந்த ஹெலிபேடு மைதானம், பாதுகாப்பு ஏற்பாடுகளை மத்திய பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று காலை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின் போது மாநில காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் விஜய் வசந்த், ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ., குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன், முன்னாள் மாவட்ட தலைவர் ராபர்ட் புரூஸ்,மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கர், மத்திய உளவுத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ், கன்னியாகுமரி போலீஸ் துணை சூப்பிரண்டு பாஸ்கரன் உள்பட பலர் கலந்து கொண்ட னர். இதேபோல் நாகர்கோவில் டெரிக் சந்திப்பு பகுதியிலும் மத்திய பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
இதேபோல் ராகுல்காந்தி முளகுமூட்டில் மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார். அந்த இடத்தை அதிகாரிகள் பார்வையிட்டனர். அப்போது முன்னாள் மாவட்ட தலைவர் ராபர்ட் புரூஸ் உடனிருந்தார்