கரூரில் தூக்க மாத்திரை தின்று தற்கொலைக்கு முயன்ற பெண் அங்கன்வாடி பணியாளர்
வேலைக்கு வர சொல்லி அதிகாரி துன்புறுத்தியதில் தூக்க மாத்திரை தின்று தற்கொலைக்கு முயன்ற பெண் அங்கன்வாடி பணியாளர் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கரூர்
பெண் அங்கன்வாடி பணியாளர்
கரூர் அருகே உள்ள புலியூர் வெள்ளாளப்பட்டி டீச்சர்ஸ் காலனி பகுதியை சேர்ந்தவர் சந்தியா (வயது 30). இவருக்கு திருமாணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இவர் குளத்துப்பாளையம் பகுதியில் செயல்படும் அங்கன்வாடி மையத்தில் கடந்த 4 ஆண்டுகளாக பணியாளராக பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் கடந்த ஒரு வாரமாக சந்தியாவிற்கு காய்ச்சல் இருந்து வந்துள்ளதால் அவர் வேலைக்கு செல்லவில்லை.
இருப்பினும் அவரது பெண் மேல்அதிகாரி ஒருவர் சந்தியாவை தொடர்பு கொண்டு அலுவலகத்தில் வந்து உடனடியாக வேலை செய்யவில்லை என்றால், பணிபுரியும் மையத்திற்கு சீல் வைப்பதாகவும், ஊதியம் வழங்கப்பட மாட்டாது என வற்புறுத்தி உள்ளார். இதனால் மனமுடைந்த சந்தியா தூக்க மாத்திரை தின்று தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து சந்தியாவை அவரது உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வீடியோ வைரல்
மேற்கண்ட தகவல்கள் அனைத்தையும் சந்தியா சமூக வலைத்தளங்களில் வீடியோவாக எடுத்து பதிவிடுள்ளார். மேலும் இதுசம்பந்தமான கடிதம் ஒன்றையும் பதிவு செய்துள்ளார்.
தற்போது அந்த வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.