தே.மு.தி.க. அங்கம் வகிக்கும் கூட்டணிதான் ஆட்சி அமைக்கும் என பிரேமலதா விஜயகாந்த் பேச்சு
யாருடன் கூட்டணி என்பதை விஜயகாந்த் அறிவிப்பார். தே.மு.தி.க. அங்கம் வகிக்கும் கூட்டணிதான் தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் என கள்ளக்குறிச்சியில் நடந்த மாவட்ட தே.மு.தி.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
கள்ளக்குறிச்சி
ஆலோசனை கூட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்ட தே.மு.தி.க. செயல்வீரர்கள் கூட்டம் கள்ளக்குறிச்சியில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட அவைத்தலைவர் கோவி.முருகன் தலைமை தாங்கினார். தொகுதி பொறுப்பாளர்கள் விஜயகுமார், அண்ணாதுரை, குழந்தைவேல், கோவிந்தன், மாவட்ட தலைவர் வசந்தா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் சரண்ராஜ் வரவேற்றார்.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது:-
உதாசினப்படுத்தினார்கள்
நாம் கூட்டணி பற்றி பேசும்போது அனைவரும் அவசரம் என்று உதாசினப்படுத்தினார்கள். மனு தாக்கல், வாபஸ் பெறும் தேதி போக 14 நாட்களே தேர்தலுக்கு இருக்கிறது. இந்த 14 நாட்களில் ஒட்டுமொத்த தொகுதிகளிலும் மக்களை சந்தித்து வாக்கு சேகரிக்க வேண்டும். தேர்தல் பணியாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் கூட்டணி பற்றி பேசினேன்.
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டம் விஜயகாந்தின் கோட்டையாகும். விவசாயிகள், நெசவாளர், மருத்துவர் உள்ளிட்ட மக்கள் பிரச்சினை என்றால் முதலில் களங்காணும் கட்சி தே.மு.தி.க. தான்.
ஆட்சி அமைக்கும்
ரிஷிவந்தியம் தொகுதியில் 40 ஆண்டுகளாக அமைக்கப்படாமல் இருந்த மணலூர்பேட்டை பாலத்தை கட்டி கொடுத்து சாதனை படைத்துள்ளார். அதேபோல் உளுந்தூர்பேட்டை தொகுதி விஜயகாந்தை டெபாசிட் இல்லாமல் தோற்கடித்தது. இதை யாரும் மறந்துவிடக் கூடாது. வரும் காலங்களில் இது போன்று இல்லாமல் எந்த தொகுதியாக இருந்தாலும் சாதனை படைக்க வேண்டும்.
கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளில் தே.மு.தி.க. நின்றாலும், கூட்டணி கட்சி நின்றாலும் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற பணியாற்ற வேண்டும். தே.மு.தி.க. எந்த கூட்டணியில் அங்கம் வகிக்கிறதோ அந்த கூட்டணி தான் தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும். தமிழ்நாட்டை ஏழு மண்டலமாக பிரித்து தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகிறோம்.
சிம்மகுரலில் பேசுவார்
விஜயகாந்த் பேசுவதில், நடப்பதில் சிறு தடுமாற்றம் உள்ளது. அவர் மிக விரைவில் சிம்மக் குரலில் பேசுவார், நடப்பார். 100 ஆண்டு காலம் வாழ்வார். நம்முடைய பிரார்த்தனை பழைய மாதிரி கம்பீரமாக வருவார். அவருக்கு குரல் சம்பந்தமாக சிகிச்சைக்கு லண்டனிலிருந்து டாக்டர் வருகிறார்.
இந்த கூட்டத்தை விஜயகாந்த் டி.வி.யில் பார்த்துக் கொண்டிருப்பார். கள்ளக்குறிச்சி மாவட்டம் மீது அவர் அதிக பற்று வைத்துள்ளார். கண்டிப்பாக இறுதிகட்ட பிரச்சாரத்துக்கு விஜயகாந்த் வருவார். யாருடன் கூட்டணி என்பதை விஜயகாந்த் அறிவிப்பார். நம்மை தன் மானதிற்கு தலைகுனிய வைக்க மாட்டார். என்னை பொறுத்தவரை தனித்துப் போட்டியிட தயாராக இருக்கிறேன். ஆனால் பொருளாதாரம் மற்றும் வெற்றி காரணமாக கூட்டணி பற்றி பேசுகிறோம்.
காலம்வரும்போது
நமக்கான காலம் வரும்போது நிரூபிப்போம். நீங்கள் இப்போதே வீடு, வீடாக சென்று தேர்தல் பணியாற்ற வேண்டும். நாம் போட்டியிட்டாலும் கூட்டணி கட்சியினர் போட்டியிட்டாலும் தேர்தல் பணியாற்றி இப்பகுதிகளில் வெற்றிகளை விஜயகாந்திடம் சமர்ப்பிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.