1 டன் இரும்பு கம்பிகள் திருடிய 4 பேர் கைது

தேவகோட்டையில் கடையை உடைத்து 1 டன் இரும்பு கம்பிகளை திருடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-02-27 18:04 GMT
தேவகோட்டை,

தேவகோட்டை வெளிமுத்தி விலக்கு அருகே திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் இரும்பு கடை வைத்திருப்பவர் சங்கர் (வயது 32). கடந்த 11-ந்தேதி கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார். காலையில் வந்து பார்த்தபோது உள்ளே இருந்த 1 டன் இரும்பு கம்பிகள் திருடப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து சங்கர் தேவகோட்டை தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் நேற்று இரவு சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்கமல் சருகணி விலக்கு சாலை அருகே வாகன சோதனை நடத்திக் கொண்டிருந்தார். அப்போது ஏற்கனவே அந்த லாரி கண்காணிப்பு கேமரா மூலம் பதிவாகி இருந்ததை கண்டுபிடித்து அதை நிறுத்தினர்.
பின்னர் லாரியில் இருந்தவர்களிடம் விசாரித்த போது முன்னுக்குப் பின் முரணாக கூறினர். இதனால் சந்தேகம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் உடனடியாக அவர்களை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினார். அப்போது விசாரணையில் கடந்த 11-ந்தேதி புதுக்கோட்டையில் இருந்து லாரியுடன் வந்து கடையை உடைத்து இரும்புக்கம்பி திருடியதை ஒப்புக்கொண்டனர். அதன்பேரில் போலீசார் புதுக்கோட்டையைச் சேர்ந்த முருகேசன் என்ற டீசல் முருகேசன், ராஜா என்ற கோழி ராஜா, மாரிமுத்து என்ற குட்லு, மற்றொரு ராஜா ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். கைதானவர்களை தேவகோட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்