உளுந்தூர்பேட்டை அருகே அரசு ஊழியர் வீட்டில் ரூ.10 லட்சம் நகை-பணத்தை கொள்ளை

உளுந்தூர்பேட்டை அருகே அரசு ஊழியர் வீட்டில் பூட்டை உடைத்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2021-02-27 17:49 GMT
உளுந்தூர்பேட்டை

அரசு ஊழியர்

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கெடிலம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 38). இவர் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சமூக தணிக்கை மாவட்ட அலுவலராக பணிபுரிந்து வருகிறார். 

கோவிந்தராஜ் உடல்நிலை சரியில்லாத தனது தாயாரை மருத்துவமனையில் அனுமதிப்பதற்காக நேற்று முன்தினம் மாலை வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தோடு வெளியூர் சென்று இருந்தார். பின்னர் மீண்டும் அவர் இரவு வீட்டுக்கு வந்தபோது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

நகை-பணம் கொள்ளை

பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு கதவுகள் திறந்து கிடந்தன. அதில் இருந்த ரூ.1 லட்சம் ரொக்கம் மற்றும் 30 பவுன் நகைகளை காணவில்லை. கோவிந்தராஜ் அவரது தாயாரை மருத்துவமனையில் அனுமதிப்பதற்காக வெளியூர் சென்றிருந்ததை அறிந்து கொண்ட மர்மநபர்கள் வீட்டின் உள்ளே புகுந்து நகை-பணத்தை கொள்ளையடித்துச்சென்று இருக்கலாம் என கூறப்படுகிறது. கொள்ளைபோன நகை-பணத்தின் மதிப்பு ரூ.10 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

மர்மநபர்களுக்கு வலைவீச்சு

இதுபற்றிய தகவல் அறிந்து உளுந்தூர்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையில் திருநாவலூர் போலீசார் விரைந்து வந்து கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவுசெய்து நகை-பணத்தை கொள்ளையடித்துச்சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

அரசு ஊழியர் வீட்டில் பூட்டை உடைத்து நகை-பணத்தை கொள்ளையடித்துச்சென்ற சம்பவம் உளுந்தூர்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்