டாஸ்மாக் கடை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

அவினாசி அருகே டாஸ்மாக் திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று இரவு பொதுமக்கள் நடுரோட்டில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-02-27 16:52 GMT
அவினாசி
அவினாசி அருகே டாஸ்மாக் திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து  நேற்று இரவு பொதுமக்கள் நடுரோட்டில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் 

திருப்பூர் மாவட்டம் அவினாசி ஒன்றியம் உப்பிலிபாளையம் ஊராட்சி எல்லை பகுதியில் நேற்று அரசு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து கையில் டார்ச்லைட்டுடன் ரோட்டில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து அப்பகுதி பொது மக்கள் கூறியதாவது:-
அவினாசி ஒன்றியம் உப்பிலிபாளையம், நம்பியாம்பாளையம், தெக்கலூர் ஆகிய 3 ஊராட்சிகளுக்குட்பட்ட பகுதியில் மதுக் கடை அமைக்கப்பட்டுள்ளது. 3 ஊராட்சி பகுதியிலும் ஏராளமான பெண்கள் தினசரி அவினாசி, திருப்பூர் உள்பட ஊர்களுக்கு வேலைக்கு சென்று வருகின்றனர். மாணவிகள் இருசக்கர வாகனத்தில் கருவலூர், தெக்கலூர், மற்றும் அவினாசி அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு சென்று வருகின்றனர்.

பொதுமக்களுக்கு இடையூறு

 இந்த நிலையில் 3 ஊராட்சிகளுக்குட்பட்ட மையப்பகுதியில் டாஸ்மாக் கடை உள்ளதால் குடித்துவிட்டு ரோட்டில் பாட்டில்களை உடைத்து போடுகின்றனர். போதை தலைக்கேரிய நிலையில் ரோட்டில் ஆங்காங்கே படுத்து விடுகின்றனர். குடிமகன்களால் பெண்கள் உள்ளிட்ட பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. 
மேலும் நேற்று கடை திறந்த முதல்நாளே அப்பகுதியில் உள்ள காட்டில் யாரோ தீ வைத்துள்ளனர். ஏற்கனவே கடந்த ஆண்டு இப்பகுதியில் அமைய இருந்த டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஒன்று திரண்டு திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. 
அதனால் அப்போது கடை திறப்பது நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் பொதுமக்களுக்கு இடையூறாக இங்கு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டுள்ளது. எனவே கடையை அப்புறப்படுத்த வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

பேச்சுவார்த்தை

 தகவலறிந்ததும் தி.மு.க ஒன்றிய பொறுப்பாளர் பழனிசாமி, எல்.ஐ.சி.அவினாசியப்பன், உப்பிலிபாளையம் ஊராட்சி துணை தலைவர் கணபதிசாமி அவினாசி போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள், சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். 
பேச்சுவார்த்தையின் முடிவில் நேற்று இரவு 8 மணியளவில் டாஸ்மாக் கடை மூடப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்