உல்லாசமாக இருக்க இடையூறாக இருந்ததால் பழ வியாபாரியை கொலை செய்த மனைவி கள்ளக்காதலனுடன் கைது பிணத்தை சாக்குமூட்டையில் கட்டி கிணற்றில் வீசிய கொடூரம்
உல்லாசமாக இருக்க இடையூறாக இருந்ததால், பழவியாபாரியை கொலை செய்து பிணத்தை சாக்கு மூட்டையில் கட்டி கிணற்றில் வீசிய மனைவியை கள்ளக்காதலனுடன் போலீசார் கைது செய்தனர்.
தாராபுரம்
உல்லாசமாக இருக்க இடையூறாக இருந்ததால், பழவியாபாரியை கொலை செய்து பிணத்தை சாக்கு மூட்டையில் கட்டி கிணற்றில் வீசிய மனைவியை கள்ளக்காதலனுடன் போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பழவியாபாரி
திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த கீரனூரை சேர்ந்தவர் தண்டபாணி (வயது 35). இவருடைய மனைவி தேவி (34). தேவியின் சொந்த ஊர் தாராபுரத்தில் உள்ள வடதாரை காமராஜர்புரமாகும். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். தண்டபாணியும், அவருடைய மனைவியும் தாராபுரம் போலீஸ் நிலையம் அருகே தள்ளுவண்டியில் பழவியாபாரம் செய்து வந்தனர். தினமும் பழவியாபாரம் முடிந்ததும் இரவு நேரத்தில் தம்பதி இருவரும் மொபட்டில் கீரனூர் சென்று விடுவர். ஒரு சில நாட்கள் தண்டபாணி மட்டும் கீரனூர் செல்வார்.
அப்போது தேவி மட்டும் தனது தாயாரின் வீடான வடதாரை காமராஜர்புரத்தில் தங்கிக்கொள்வார்.
இந்த நிலையில் கடந்த 14-ந் தேதி இரவு தேவி மட்டும் கீரனூர் சென்றுள்ளார். மறுநாள் பழவியாபாரம் செய்ய தாராபுரத்திற்கு தேவி வராமல் 16-ந் தேதி வரை கீரனூரில் தங்கிக்கொண்டார். இதனால் தண்டபாணியின் உறவினர்கள் தேவியிடம் பழவியாபாரத்திற்கு தாராபுரம் போகவில்லையா? என்று கேட்டுள்ளனர். அப்போது தேவி, “ தனது கணவர் தண்டபாணி வெளியூர் சென்று விட்டதால் அவர் வந்தவுடன் வியாபாரத்திற்கு போக வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். ஆனால் அன்றைய தினமே தனது கணவர் தண்டபாணியை கடந்த 14-ந் தேதி முதல் காணவில்லை என்றும், கண்டுபிடித்து தரவேண்டும் என்றும் கீரனூர் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தண்டபாணியை தேடினர். இதற்கிடையில் தண்டபாணியின் உறவினர்களும் தண்டபாணியை தேடினர். ஆனாலும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
போலீசில் புகார்
இதற்கிடையில் கணவரை காணவில்லை என்று தேவி திடீரென்று புகார் செய்ய காரணம் என்ன? என்று சந்தேகத்தின் பேரில் தேவியிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதாக கூறப்படுகிறது. அதேநேரம் கணவர் காணாமல் போனது குறித்து தேவியின் முகத்தில் பதற்றமோ, அச்சமோ தெரியவில்லை.
இதனால் தேவியின் மீது போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது. இதையடுத்து அவரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை செய்தனர். விசாரணையில் கள்ளக்காதல் விவகாரத்தில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்து பிணத்தை கிணற்றில் வீசி விட்டதாக தேவி தெரிவித்தார். இதையடுத்து போலீசார் தேவியை அழைத்து பிணத்தை வீசிய கிணற்றை காட்டுமாறு கூறினர். இதையடுத்து அந்த கிணற்றை தேவி அடையாளம் காட்டினார். பின்னர் போலீசாரும், தீயணைப்பு துறையினரும் அங்கு சென்று கிணற்றில் சாக்குமூட்டையில் கட்டி வீசப்பட்ட தண்டபாணியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து தேவியை போலீசார் கைது செய்தனர்.
கைதான தேவி போலீசில் கொடுத்துள்ள வாக்குமூலம் வருமாறு:-
2-வது திருமணம்
எனது சொந்த ஊர் தாராபுரம் வடதாரை காமராஜர்புரமாகும். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு எனக்கும், எனது உறவினரான திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த கீரனூரை சேர்ந்த முனியப்பனுக்கும் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின்னர் எங்களுக்கு ஒரு மகன் பிறந்தான். அதன்பின்னர் எனது நடத்தை சரியில்லை என்று கூறி, முனியப்பன் தனது மகனுடன் என்னை விட்டு பிரிந்து தனியாக சென்று விட்டார்.
அதன்பின்னர்தான் கீரனூரை சேர்ந்த தண்டபாணியை 2-வது திருமணம் செய்து கொண்டேன். எங்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். திருமணத்திற்கு பின்னர் நாங்கள் இருவரும் தாராபுரம் போலீஸ் நிலையம் அருகே தள்ளுவண்டியில் பழவியாபாரம் செய்து வந்தோம். தினமும் வியாபாரம் முடிந்ததும், நானும், எனது கணவரும் மொபட்டில் கீரனூர் சென்று விடுவோம். சில நாட்கள் எனது தாயார் வீடான வடதாரையில் நான் தங்கிக்கொள்வேன்.
உல்லாசம்
இதற்கிடையில் நான் அடிக்கடி எனது தாயார் வீட்டிற்கு சென்றதால், எனது தாயாரின் வீட்டின் அருகில் வசித்து வரும் உறவினரான பெயிண்டர் அபிஷேக்கிற்கும் (19) எனக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் எங்களுக்குள் மிகுந்த நெருக்கத்தை ஏற்படுத்தியது. அந்த நெருக்கம் கள்ளக்காதலாக மாறியது. இதனால் நானும், அபிஷேக்கும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்தோம். நான் அபிஷேக்குடன் தனிமையில் இருப்பது எனது கணவருக்கு தெரியவந்தது. இதனால் அவர் என்னை கண்டித்தார். ஆனாலும் அபிஷேக்கை என்னால் மறக்க முடியவில்லை.
இதையடுத்து கடந்த 14-ந் தேதி எனது கணவரை வௌியூர் சென்று வருமாறு கூறினேன். அதன்படி அவர் வெளியூர் சென்றார். இதையடுத்து அபிஷேக்கை நான் செல்போனில் தொடர்பு கொண்டு, எனது கணவர் வெளியூர் சென்று விட்டார், எனவே நீங்கள் கீரனூர் வாருங்கள், நாம் தனிமையில் இருப்போம் என்றேன். அதன்பின்னர் நானும் கீரனூர் சென்றேன். அங்கு அபிஷேக்கும் வந்தார். பின்னர் நாங்கள் இருவரும் தனிமையில் இருந்தோம். அப்போது எதிர்பாராத விதமாக இரவு 11 மணிக்கு எனது கணவர் தண்டபாணி அங்கு வந்து விட்டார். அவர், நாங்கள் இருவரும் தனிமையில் இருப்பதை பார்த்து விட்டார். இதையடுத்து தண்டபாணிக்கும், அபிஷேக்கிற்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இனி இவரை உயிரோடு விட்டால் நாம் சந்தோஷமாக இருக்க முடியாது என்று, எனது கணவரை தீர்த்துக்கட்ட, நானும், எனது கள்ளக்காதலன் அபிஷேக்கும் சேர்ந்து முடிவு செய்தோம்.
அடித்துக்கொலை
இதையடுத்து ஒரு பிளாஸ்டிக் பையை எடுத்து, தண்டபாணியின் முகத்தை மூடி, அவருடைய கையை பின்னால் வைத்து கட்டினோம். பின்னர் அவரை இரும்பு ராடால் அடித்துக்கொன்றோம். அதன் பின்னர் அவருடைய உடலை ஒரு சாக்குமூட்டையில் கட்டினோம். நள்ளிரவு 12 மணிக்கு சாக்குமூட்டையை ஒரு மொபட்டில் முன்னால் வைத்துக்கொண்டு அபிஷேக்கும், நானும் தாராபுரம் புறப்பட்டோம். அபிஷேக் மொபட்டை ஓட்டினார். பின் இருக்கையில் நான் அமர்ந்து கொண்டேன். தண்டபாணியின் உடலை எங்கு வீசலாம் என்று யோசித்தபோது தாராபுரம்-ஒட்டன்சத்திரம் சாலை பழனி பிரிவு அமராவதி ஆற்றின் ஓரம் உள்ள ஒரு கிணறு ஞாபகத்திற்கு வந்தது. இதையடுத்து நாங்கள் இருவரும் அங்கு சென்று சாக்குமூட்டையுடன் கல்லையும் சேர்த்து கட்டி கிணற்றுக்குள் வீசி விட்டு வந்து விட்டோம். பின்னர் என் மீது போலீசாருக்கு சந்தேகம் வராமல் இருக்க 16-ந் தேதி கணவரை காணவில்லை என்று கீரனூர் போலீசில் புகார் கொடுத்தேன். ஆனால் போலீசாரின் கிடுக்கிப்படி விசாரணையில் உண்மையை ஒப்புக்கொண்டேன்.
இவ்வாறு அவர் வாக்குமூலம் கொடுத்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
கள்ளக்காதலன் கைது
தேவி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அபிஷேக்கையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கள்ளக்காதல் மோகத்தில் கணவரை, கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவியே கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
------------
பாக்ஸ்
போலீசில் சிக்காமல் பிணமூட்டையை கொண்டு வந்த கள்ளக்காதல்ஜோடி
தாராபுரம்-ஒட்டன்சத்திரம், தாராபுரம்-பழனி சாலையில் இரவு நேரங்களில் போலீசார் ரோந்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதுவும் இரவு நேரத்தில் ஒரு மொபட்டில் சாக்குமூட்டை இருந்தால், போலீஸ் சோதனை சாவடியில் அந்த சாக்குமூட்டையில் என்ன இருக்கிறது என்று சோதனை செய்வார்கள். ஆனால் கீரனூரில் இருந்து தாராபுரம் வரை உள்ள சோதனை சாவடிகளில் கள்ளக்காதல்ஜோடி, சிக்காமல் தண்டபாணியின் உடலை கொண்டு வந்து கிணற்றில் வீசி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-----------------
பாக்ஸ்) காதலர் தினத்தை கொண்டாடிய ஜோடி
தேவியும், அபிஷேக்கும் கடந்த 14-ந் தேதி காதலர் தினத்தை கொண்டாட முடிவு செய்தனர். அதற்காக கணவர் தண்டபாணியை வெளியூர் போங்கள் என்று, அனுப்பிய தேவி, அபிஷேக்கை வீட்டிற்கு வரவழைத்துள்ளார். அங்கு இருவரும் காதலர் தினத்தை சந்தோஷமாக கொண்டாடினர். அதன்பின்னர் கள்ளக்காதல்ஜோடி உல்லாசமாக இருந்துள்ளனர். அப்போது அங்கு திடீரென்று தண்டபாணி வந்து விட்டார். அதன்பின்னரே தண்டபாணியை கொலை செய்துள்ளனர்.
--------------
பாக்ஸ்) நாடகமாடிய மனைவி
கடந்த 14-ந் தேதி முதல் தண்டபாணியை காணாததால், அவரைபற்றி அவருடைய உறவினர்கள் கேட்டுள்ளனர். அப்போது அவர் வெளியூர் சென்று விட்டதாக தெரிவித்துள்ளார். ஆனால் 16-ந் தேதி கீரனூர் போலீஸ் நிலையம் சென்று, தண்டபாணியை காணவில்லை என்று புகார் செய்தார். இதையடுத்து உறவினர்களுடன் சேர்ந்து தேவியும், தனது கணவரை தேடுவதுபோல் நடித்துள்ளார். கணவர் வெளியூர் சென்று விட்டதாக கூறிய மனைவி, திடீரென்று தனது கணவரை காணவில்லை என்று போலீசில் புகார் கொடுத்து இருப்பது போலீசாருக்கும், தேவியின் உறவினர்களுக்கும் தேவி மீது சந்தேக்தை ஏற்படுத்தியது.
-----------------------------
கொலை செய்யப்பட்ட தண்டபாணி
-----------
சாக்கு மூட்டையில் வைக்கப்பட்டு இருந்த தண்டபாணியின் உடலை படத்தில் காணலாம்.
கைது செய்யப்பட்ட தேவி,
கள்ளக்காதலன் அபிஷேக்