சுவர் விளம்பரங்கள் அழிப்பு
சட்டமன்ற தேர்தலையொட்டி தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து ராமநாதபுரத்தில் அரசு சுவர்களில் விளம்பரங்கள் அழிக்கப்பட்டன.
ராமநாதபுரம்,
சட்டமன்ற தேர்தலையொட்டி தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து ராமநாதபுரத்தில் அரசு சுவர்களில் விளம்பரங்கள் அழிக்கப்பட்டன.
நடவடிக்கை
தமிழக சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது. இதனை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் தேர்தல் விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுஉள்ளது.
முதல்கட்டமாக 4 தொகுதிகளுக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் அரசு சுவர்களில் எழுதப்பட்டுள்ள சுவர் விளம்பரங்களை முழுமையாக அழிக்கும் பணி முழுவீச்சில் தொடங்கி நடைபெற்று வருகிறது. கலெக்டர் அலுவலக வளாகம் மற்றும் தேசிய நெடுஞ்சாலை பகுதிகள், நகராட்சி பகுதிகளில் நேற்று காலை முதல் உள்ளாட்சி பணியாளர்கள் மேற்பார்வையில் தூய்மை பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள் உள்ளிட்டோரை கொண்டு சுவர்விளம் பரங்களை சுண்ணாம்பினால் அழிக்கும் பணி நடைபெற்றது.
பஸ் போக்குவரத்து
இந்த பணிகளை கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் நேரில் சென்று பார்வையிட்டார். ராமநாதபுரம் புதிய பஸ்நிலை பகுதிக்கும் நேரில் சென்று பணிகளை ஆய்வு செய்த கலெக்டர் அங்கு ஏராளமான பயணிகள் போக்குவரத்து விசாரணை அலுவலக பகுதியில் கூடியிருப்பதை கண்டு அங்கு சென்றார்.
அப்போது அங்கிருந்த போக்குவரத்து அதிகாரிகள் தற்போதுதான் ஒரு பஸ் அனுப்பி உள்ளதாகவும் மீண்டும் கூட்டம் கூடியுள்ளதால் மறுபேருந்து ஏற்பாடு செய்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்தனர்.
அப்போது அங்கிருந்த பயணிகள் நீண்டநேரமாக காத்திருப்பதாகவும் தொண்டி, உப்பூர் பகுதிகளுக்கு செல்ல பஸ் வேண்டும் என்றும் கோரினர்.இதனை தொடர்ந்து அங்கிருந்த அலுவலர்களை எச்சரித்த கலெக்டர் உடனடியாக போக்குவரத்து மேலாளரை தொடர்பு கொண்டு பஸ் ஏற்பாடு செய்யும்படி உத்தரவிட்டார்.
புகார்
இதன்படி உடனடியாக பஸ் வரவழைக்கப்பட்டு அங்கு காத்திருந்த பயணிகள் ஏறி ஊருக்கு சென்றனர்.அந்த சமயத்தில் அங்கிருந்த பயணிகள், பஸ்நிலைய கட்டண கழிப்பறை கடும் சுகாதாரக்கேடாக உள்ளதாக புகார் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து கலெக்டர் கழிப்பறைக்கு நேரில் சென்று பார்வையிட்டு சுகாதாரக்கேடாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.உடனடியாக சரிசெய்து சுகாதாரத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
கலெக்டரின் இந்த அதிரடி நடவடிக்கையால் பயணிகள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர். கலெக்டருடன் நகரசபை ஆணையாளர் விஸ்வநாதன், ஊராட்சிகள் உதவி இயக்குனர் கேசவதாசன், தாசில்தார் முருகவேல் ஆகியோர் உடன் சென்றனர்.