திருக்கழுக்குன்றம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 335 பேருக்கு ரூ.2 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி; பயனாளிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது

தமிழகத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடனை தள்ளுபடி செய்வதாக நேற்று தமிழக அரசு அறிவித்தது.

Update: 2021-02-27 14:19 GMT
அதையொட்டி, செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பேரூராட்சியில் உள்ள திருக்கழுக்குன்றம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க உறுப்பினர்கள் 335 பேருக்கு ரூ.2 கோடியே 12 லட்சம் பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த அலுவலகத்தில் சங்க உறுப்பினர்களின் கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்க தலைவர் வேலாயுதம் வரவேற்றார். துணைத் தலைவர் திருநாவுக்கரசு மாவட்ட துணைத் தலைவர் எஸ்.வந்தராவ், கரும்பு உற்பத்தி சங்க மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ஆனூர் பக்தவச்சலம், முன்னாள் திருக்கழுக்குன்றம் ஒன்றியக்குழுத் துணை தலைவர் விஜயரங்கன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் எஸ்.ஆறுமுகம் கலந்து கொண்டு உரையாற்றினார், பின்னர் சங்க உறுப்பினர்கள் 335 பேருக்கு ரூ.2 கோடியே 12 லட்சத்து 1473 பயிர் கடன் தள்ளுபடிக்கான அரசு சான்றிதழை வழங்கினார்.

இதே போல சாலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் 309 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 61 லட்சம் பயிர் கடன் தள்ளுபடி செய்ததற்கான சான்றிதழ்களை மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம் வழங்கினார்.

மேலும் செய்திகள்