மாசி பிரம்மோற்சவ விழாவையொட்டி வடிவுடையம்மன் கோவிலில் கல்யாணசுந்தரர் திருக்கல்யாண உற்சவம்

திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில் மாசி மாத பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது. விழாவில் உற்சவர் சந்திர சேகரர் தினமும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாட வீதிஉலா வந்தார். விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் 24-ந்தேதி கோலாகலகமாக நடைபெற்றது.

Update: 2021-02-27 13:45 GMT
இந்தநிலையில் பிரம்மோற்சவ விழாவின் மற்றொரு முக்கிய நிகழ்வான கல்யாண சுந்தரர் திருக்கல்யாண வைபவம் நேற்று காலை நடைபெற்றது. இதையொட்டி வசந்தமண்டபத்தில் சிவபெருமான், மணக்கோலமான கல்யாணசுந்தரர் அலங்காரத்தில் எழுந்தருளினார். அவருடன் பார்வதிதேவி, திரிபுரசுந்தரி கோலத்தில் எழுந்தருளினார். பின்னர் யாகம் வளர்க்கப்பட்டு, வேள்வியில் மங்கலப்பொருட்கள் சமர்ப்பிக்கப்பட்டது.

தொடர்ந்து கல்யாண சுந்தரருக்கு காப்பு மற்றும் பூணூல் அணிவிக்கப்பட்டு, வேதமந்திரங்கள், வாத்தியங்கள் முழங்க திருக்கல்யாண வைபவம் நடந்தேறியது. அப்போது அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பெண்கள், இனிப்புகளை பரிமாறிக்கொண்டனர். பின்னர் மாலை மாற்றுதல், பால், பழம் வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன. நிறைவாக மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

அதைதொடர்ந்து மதியம் 63 நாயன்மார்கள் மாடவீதி உலாவும், இரவு மகிழடி சேவை போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. விழாவில் இன்று(சனிக்கிழமை) தீர்த்தவாரி, கொடியிறக்கமும், நாளை(ஞாயிற்றுக்கிழமை) இரவு 18 திருநடனம் மற்றும் பந்தம்பறி உற்சவத்துடன் விழா நிறைவடைகிறது.

மேலும் செய்திகள்