சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு எதிரொலி: விளம்பரங்களை அகற்ற சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி உத்தரவு

சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு எதிரொலியாக விளம்பரங்களை அகற்ற சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி பிரகாஷ் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2021-02-27 09:28 GMT
சட்டமன்ற தேர்தல்
தமிழக சட்டமன்றத்துக்கு, வருகிற ஏப்ரல் மாதம் 6-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பினை தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா டெல்லியில் நேற்று வெளியிட்டார். தேர்தல் அறிவிப்பு வெளியான உடன் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.

இதையடுத்து சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரியும், பெருநகர சென்னை மாநகராட்சியின் கமிஷனருமான கோ.பிரகாஷ் சுவர் விளம்பரங்களை அகற்ற உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக கோ.பிரகாஷ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
அரசு சொத்தில் உள்ள அனைத்து சுவர் விளம்பரங்கள், போஸ்டர்கள், துண்டு பிரசுரங்கள், கட்-அவுட்டுகள், பேனர்கள், கொடிகள் உள்ளிட்டவை தேர்தல் அறிவிப்பில் இருந்து 24 மணி நேரத்தில் அகற்றப்படும்.

விளம்பரங்கள் அகற்றப்படும்
ரெயில் நிலையங்கள், பஸ் நிறுத்தங்கள், சாலைகள், அரசு பஸ்கள், தொலைத்தொடர்பு நிலையங்கள், உள்ளாட்சி அமைப்புகளின் கட்டிடங்களில் உள்ள அரசியல் கட்சிகளின் விளம்பரங்கள் தேர்தல் அறிவிப்பில் இருந்து 48 மணி நேரத்துக்குள் அகற்றப்படும். தனியார் இடங்களில் வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் விளம்பரங்கள், உள்ளூர் சட்டம் மற்றும் நீதிமன்றத்தின் உத்தரவுகளுக்கு உட்பட்டு, ஏதேனும் இருந்தால், தேர்தல் அறிவிப்பிலிருந்து 72 மணி நேரத்திற்குள் அகற்றப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்