தென்காசியில் முடி திருத்தும் தொழிலாளர்கள் உண்ணாவிரதம்
தென்காசியில் முடிதிருத்தும் தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். இதனை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் 1,750 சலூன் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
தென்காசி:
தென்காசியில் முடிதிருத்தும் தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். இதனை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் 1,750 சலூன் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
உண்ணாவிரதம்
தென்காசி மாவட்ட தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச்சங்கம் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில், நேற்று தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள 1,750 சலூன் கடைகள் அடைக்கப்பட்டன.
மருத்துவர் சமூகம் மற்றும் முடி திருத்தும் தொழிலாளர்களுக்கு 5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். இந்த சமூகத்திற்கு சட்டப் பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரதம் நடைபெற்றது.
கலந்து கொண்டவர்கள்
இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் ரவி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பண்டார சிவன், பொருளாளர் முத்தையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைத்தலைவர்கள் டி.எஸ். முருகன், கடையநல்லூர் முருகேசன், புளியங்குடி காந்தி, சங்கரன்கோவில் மாரியப்பன், வாசுதேவநல்லூர் சுந்தரமகாலிங்கம், சிவகிரி தங்கமலை, தென்காசி தாலுகா செயலாளர் சேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர். தென்காசி நகர ஒருங்கிணைப்பாளர் ராஜா நன்றி கூறினார்.