நாமக்கல்லில் அரசு மருத்துவக்கல்லூரி கட்டிடம் திறப்பு எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்
நாமக்கல்லில் அரசு மருத்துவக்கல்லூரி கட்டிடம் திறப்பு எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்
நாமக்கல்:
நாமக்கல்லில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட அரசு மருத்துவக்கல்லூரி கட்டிடத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
அரசு மருத்துவக்கல்லூரி
நாமக்கல் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் 27 ஏக்கர் பரப்பளவில் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை சுமார் ரூ.338 கோடியில் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் 5-ந் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டி இந்த பணிகளை தொடங்கி வைத்தார்.
2021-2022-ம் கல்வி ஆண்டில் எம்.பி.பி.எஸ். சேர்க்கையை தொடங்கும் வகையில், கொரோனா காலத்திலும் கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் கல்லூரி கட்டிடம் மற்றும் நிர்வாக அலுவலக கட்டிடம் கட்டும் பணி முடிவடைந்து உள்ளது. இதை மார்ச் மாதம் முதல் வாரத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைப்பார் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது.
முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்
இதற்கிடையே நேற்று மாலை தமிழக சட்டசபைக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. முன்னதாக பிற்பகலில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி கட்டிடங்களை திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் திறந்து வைத்த மருத்துவக்கல்லூரி கட்டிடத்தை கலெக்டர் மெகராஜ், மருத்துவ கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி ஆகியோர் பார்வையிட்டு, இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த நிகழ்ச்சியில் செயற்பொறியாளர் சண்முகம், ஒப்பந்ததாரர் பி.எஸ்.டி.பி.எஸ். தென்னரசு மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதேபோல் அரசு மருத்துவக்கல்லூரி திறக்கப்பட்டதை தொடர்ந்து நாமக்கல் மணிக்கூண்டு அருகே அ.தி.மு.க.வினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். இதில் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் மயில்சுந்தம், நகர கூட்டுறவு வங்கியின் முன்னாள் தலைவர் டி.எல்.எஸ்.காளியப்பன், ஒன்றியகுழு துணை தலைவர் ராஜா என்கிற செல்வகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
==========