கோரிக்கைகளை வலியுறுத்தி சலூன் கடைக்காரர்கள் உண்ணாவிரதம் போராட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி சலூன் கடைக்காரர்கள் உண்ணாவிரதம் போராட்டம் நடத்தினர்

Update: 2021-02-26 20:51 GMT
மதுரை
கோரிக்கைகளை வலியுறுத்தி சலூன் கடைக்காரர்கள் உண்ணாவிரதம் போராட்டம் நடத்தினர்.
5 சதவீத உள் இடஒதுக்கீடு
மருத்துவர் சமூகத்தினருக்கு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் 5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்க வேண்டும், சமூக மக்களுக்கு சட்ட பாதுகாப்பு வழங்க வேண்டும், தியாகி விஸ்வநாததாசுக்கு மதுரையில் சிலை அமைக்க வேண்டும், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் முடி திருத்தும் பணியில் ஈடுபடுபவர்களை அரசு பணியாளராக மாற்ற வேண்டும் என்பது உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி சலூன் கடைகளை அடைத்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தமிழ்நாடு மருத்துவர் நலச்சங்கத்தினர் அறிவித்து இருந்தனர். 
அதன்படி, தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச்சங்கம் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர் நலச்சங்கத்தின் சார்பில் மதுரை அண்ணாநகர் பகுதியில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. மாநில இணைச்செயலாளர் ஞானசேகரன் தலைமை தாங்கினார். மாவட்டத்தலைவர் முருகேசன் வரவேற்றார். நகர், புறநகர் மாவட்ட செயலாளர்கள் குலகன், வேலாயுதம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் இளைஞர் அணி அமைப்பாளர் பழனி, புதூர் கிளை சங்க தலைவர் பால்தினகரன், அமைப்பாளர் குறிஞ்சி முருகன், ஆனையூர் சரவணன், மேலூர், சத்திரப்பட்டி, நாகமலைபுதுக்கோட்டை, கள்ளிக்குடி, கருங்காலக்குடி, எல்லீஸ் நகர் உள்ளிட்ட பல்வேறு கிளைகளை சேர்ந்த நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். இதுபோல், மகளிர் அணி அமைப்பாளர் தனபாக்கியம் தலைமையில், மகளிர் அணி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் காலை 10 மணி முதல் மதியம் 1 மணிவரை மட்டுமே உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பின்னர் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் அங்கிருந்து கிளம்பி சென்றனர். முடிவில், பொருளாளர் பாக்கியம் நன்றி கூறினார்.
வாடிப்பட்டி
இதேபோல் வாடிப்பட்டி கிளை தமிழ்நாடு மருத்துவர் சமுதாய பேரவை சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி கடையடைப்பு போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்திற்கு சங்க செயலாளர் ராமசாமி தலைமை தாங்கினார். துணை தலைவர் பாண்டி, துணைசெயலாளர் திருப்பதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் ஜெபாண்டி போராட்டம் பற்றி விளக்கி பேசி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் இடஒதுக்கீடு வழங்ககோரியும், சட்ட பாதுகாப்பு வழங்ககோரியும் கோஷம் எழுப்பப்பட்டது. இதில் சங்க நிர்வாகிகள் ஏராளமானவர்கள் சலூன் கடைகளை அடைத்து விட்டு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்