கைத்தறி ரகங்களை விசைத்தறியில் உற்பத்தி செய்தால் கடும் நடவடிக்கை ஈரோடு கலெக்டர் கதிரவன் எச்சரிக்கை

கைத்தறி ரகங்களை விசைத்தறியில் உற்பத்தி செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஈரோடு கலெக்டர் கதிரவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2021-02-26 20:38 GMT
கைத்தறி ரகங்களை விசைத்தறியில் உற்பத்தி செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஈரோடு கலெக்டர் கதிரவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பாவது:-
கைத்தறி ரகங்கள்
கைத்தறி ரக ஒதுக்கீடு சட்டத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ள அளவீடுகளின்படி கைத்தறிக்கென டிசைனுடன் கூடிய பருத்தி சேலை, பட்டு சேலை, வேட்டி, துண்டு, லுங்கி, போர்வை, சட்டை துணிகள் உள்ளிட்ட 11 வகை ரகங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. இந்த ரகங்களை விசைத்தறிகளில் உற்பத்தி செய்வது கைத்தறி ரக ஒதுக்கீடு சட்டப்படி தண்டனைக்குரிய செயலாகும்.
கைத்தறிக்கென ஒதுக்கப்பட்ட இந்த ரகங்களை விசைத்தறிகளில் உற்பத்தி செய்யப்படுகின்றதா? என்பது குறித்து அமலாக்க பிரிவு அலுவலர்கள் விசைத்தறி கூடங்களை தீவிரமாக ஆய்வு செய்து வருகிறார்கள்.
6 மாத சிறை தண்டனை
ஆய்வின்போது கைத்தறிக்கென ஒதுக்கப்பட்ட ரகங்கள் விசைத்தறிகளில் உற்பத்தி செய்யப்படுவது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட விசைத்தறியாளர் மீது காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்து, கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து 6 மாத சிறை தண்டனை அல்லது விசைத்தறி ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் அல்லது 2-ம் சேர்த்து தண்டனை வழங்கப்படும்.
எனவே ஈரோடு மாவட்ட விசைத்தறியாளர்கள் கைத்தறிக்கென ஒதுக்கப்பட்ட ரகங்களை விசைத்தறிகளில் உற்பத்தி செய்வதை தவிர்க்க வேண்டும். மேலும் கைத்தறிக்கென ஒதுக்கப்பட்ட 11 வகை ரகங்கள் குறித்து விளக்கம் பெற ஈரோடு சூரம்பட்டி ஜெகநாதபுரம் காலனியில் இயங்கி வரும் உதவி அமலாக்க அலுவலர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்