வீட்டில் கியாஸ் கசிந்ததால் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்த 3 பேர் பலி அண்ணன்-தங்கைக்கு தீவிர சிகிச்சை

வீட்டில் கியாஸ் கசிந்து ஏற்பட்ட தீ விபத்தில் உடல் கருகிய 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த அண்ணன்-தங்கைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Update: 2021-02-26 20:20 GMT
அனுப்பர்பாளையம்
வீட்டில் கியாஸ் கசிந்து ஏற்பட்ட தீ விபத்தில் உடல் கருகிய 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த அண்ணன்-தங்கைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. 
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கியாஸ் கசிவு 
திருப்பூர் பி.என்.ரோடு பூலுவப்பட்டியை அடுத்த அம்மன்நகர் பகுதியை சேர்ந்தவர் விஜயா. இவருடைய மகன் அஸ்வின் (வயது 19), மகள் தர்ணிகா (16). இவர்களது வீட்டின் அருகில் அஸ்வினின் சித்தப்பா சரவணன் (43) என்பவர் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
 இந்த நிலையில் கடந்த 21-ந்தேதி காலை சரவணன் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியே சென்றிருந்தார். அப்போது அவருடைய வீட்டில் கியாஸ் கசியும் வாசம் வந்துள்ளது. இதையடுத்து அருகில் இருந்த அஸ்வின் அவருடைய சித்தப்பா சரவணன் செல்போனுக்கு தொடர்பு கொண்டு இந்த தகவலை கூறி உள்ளார். 
தீப்பிடித்தது
இதையடுத்து அங்கு விரைந்து வந்த சரவணன் வீட்டுக் கதவை திறந்து உள்ளே சென்றுள்ளார். அப்போது அவருடன் அஸ்வின், விஜயா, தர்ணிகா, மற்றும் பக்கத்து வீட்டை சேர்ந்த கோகிலா ஆகியோரும் வீட்டின் உள்ளே சென்றுள்ளனர். இந்த நிலையில் கசிந்து கொண்டிருந்த கியாசை சரி செய்த சரவணன் அடுப்பை பற்ற வைத்துள்ளார். 
அப்போது ஏற்கனவே வீடு முழுவதும் கியாஸ் கசிந்து நிரம்பி இருந்ததால் குப்பென தீ பிடித்தது. இதில் வீட்டில் இருந்த 5 பேர் மீதும் தீப்பற்றி எரிந்தது. இதனால் வலி தாங்க முடியாமல் அனைவரும் அலறி துடித்தனர். 
3 பேர் பலி
அவர்களுடைய அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் 5 பேரையும் மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் 5 பேரும் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் விஜயா உயிரிழந்தார். இதையடுத்து நேற்று அதிகாலை சரவணன், கோகிலா ஆகிய 2 பேரும் அடுத்தடுத்து சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் தர்ணிகா மிகவும் ஆபத்தான நிலையிலும், அஸ்வின் படுகாயத்துடனும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து திருமுருகன்பூண்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்