ஆபத்தை உணராத இளைஞர்கள் ஒரே மோட்டார் சைக்கிளில் 5 பேர் பயணம்
ஒரே மோட்டார் சைக்கிளில் 5 பேர் பயணம்
கறம்பக்குடி
கறம்பக்குடி வளர்ந்து வரும் நகர பகுதியாகும். தஞ்சாவூர் மாவட்ட எல்லை பகுதியில் உள்ளதால் 2 மாவட்டங்களை சேர்ந்த வாகனங்கள் இப்பகுதியில் அதிகம் இயக்கப்படுகிறது. இருசக்கர வாகனங்களும் இங்கு அதிகம். இதனால் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடியும் ஏற்படுவது வழக்கம். இந்நிலையில் மோட்டார் சைக்கிள்களில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் சிலர் 3 முதல் 5 பேர் வரை அமர்ந்து செல்வது தொடர்ந்து வருகிறது. அதிவேகத்தில் வரும் இத்தகைய இளைஞர்களால் எதிரே வரும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் அச்சப்படும் நிலை உள்ளது. இதை தவிர விபத்துக்களும் நடைபெற்று வருகின்றன. ஆபத்தை உணராமல், வாகன விதிகளை மீறி மோட்டார் சைக்கிள்களை ஓட்டிச்செல்லும் வாலிபர்களை போலீசார் பலமுறை எச்சரித்தும் அவர்கள் திருந்தவில்லை. 4,5 பேர் பயணிப்பது தொடர்ந்து வருகிறது. விலைமதிப்பற்ற உயிருடன் விளையாடும் இளைஞர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.