அய்யர்மலை ரெத்தினகிரீஸ்வரர் கோவிலில் ரோப்கார் சோதனை ஓட்டம்
அய்யர்மலை ரெத்தினகிரீஸ்வரர் கோவிலில் ரோப்கார் சோதனை ஓட்டத்தை காணொலிக்காட்சி மூலம் முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்.
குளித்தலை
ரெத்தினகிரீசுவரர் கோவில்
குளித்தலை அருகே அய்யர்மலையில் பிரசித்தி பெற்ற ரெத்தினகிரீசுவரர் கோவில் உள்ளது. மலைமேல் அமைந்துள்ள இக்கோவில் கடல்மட்டத்தில் இருந்து 1,178 அடிகள் உயரத்திலும், மலை உச்சிக்கு செல்ல 1,017 படிகள் உள்ளன. இங்கு தினமும் தமிழகம் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இந்தநிலையில் சில பக்கதர்கள், குழந்தைகள், முதியோர்கள் இப்படிகளில் ஏறி மலை உச்சிக்கு செல்ல மிகவும் சிரமப்பட்டு வந்தனர். ஆகவே இங்கு ரோப்கார் (கம்பி வட ஊர்தி) அமைக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து கடந்த 2.2.2011-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி காலத்தில் ரோப்கார் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. ஆட்சி மாற்றத்திற்கு பிறகு இத்திட்டம் செயல்படுத்துவதில் சற்று காலதாமதம் ஏற்பட்டது. இதையடுத்து இக்கோவிலில் ரோப்கார் அமைக்கும் திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதியளித்தது. ரூ.6 கோடியே 70 லட்சம் இத்திட்டத்திற்கான செலவு தொகையாக நிர்ணயம் செய்யப்பட்டது. ரோப்கார் திட்டத்திற்காக பொதுமக்கள் மூலம் சுமார் ரூ.3 கோடிக்கு மேல் நன்கொடையாக பெறப்பட்டு வங்கியில் வைக்கப்பட்டிருந்தது.
பூமிபூஜை
கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரோப்கார் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை போடப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. சுமார் 3 ஆண்டுகள் இப்பணிகள் நடந்துவந்தநிலையில். மலையடிவாரத்தில் அமைக்கப்பட்டுள்ள கீழ்தளம் மற்றும் மலைமேல் அமைக்கப்பட்டுள்ள மேல்தளத்தின் பணிகள் தற்போது முடிவுற்றுள்ளது.
சோதனை ஓட்டம்
இந்தநிலையில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி வாயிலாக பக்தர்களின் பயன்பாட்டிற்காக ரோப்கார் சோதனை ஓட்டத்தை நேற்று தொடங்கி வைத்தார். இதையொட்டி அய்யர்மலையில் நடந்த விழாவில் மாவட்ட கலெக்டர் மலர்விழி குத்துவிளக்கேற்றி ரோப்கார் இயக்கத்தை இயக்கி அதன் செயல்பாடுகளை பார்த்து அதிகாரிகளிடம் உரிய விளக்கத்தினை கேட்டறிந்தார். பின்னர் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
சுமார் 3,500 மீட்டர் (900 அடி) உயரத்திற்கு கீழ்தளத்தில் இருந்து மேல்தளத்திற்கு ரோப்கார் இணைப்பதற்குரிய அனைத்து உபகரணங்களும் வரப்பெற்றுள்ளது. ஒரே சமயத்தில் 4 பெட்டிகள் மேல் ஏறுவதும், வேறு 4 பெட்டிகள் கீழ் இறங்கும் வகையில் வடிவமைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இந்தநிகழ்ச்சியில் மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் மருதூர் திருநாவக்கரசு, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.