டீசல் விலை உயர்வை கண்டித்து கோவையில் லாரி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்
டீசல் விலை உயர்வை கண்டித்து கோவையில் லாரி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
கோவை,
டீசல் விலை உயர்வை கண்டித்து கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு நேற்று கோவை லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் டீசல், பெட்ரோல் விலையை குறைக்க கோரி மத்திய அரசை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். மேலும் சுங்கச் சாவடிகளில் பணம் செலுத்தி செல்ல தனி வழி அமைக்க வேண்டும்,
3-ம் நபர் காப்பீட்டு பிரிமியத்தை குறைக்க வேண்டும், காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தி கோஷமிட்டனர்.
இதுகுறித்து சங்க தலைவர் முருகேசன் கூறியதாவது:-
டீசல், பெட்ரோல் விலை உயர்வு, சுங்க கட்டணத்தை ரத்து செய்செய்ய வேண்டும். இவே பில் அனுமதி நேரம் அதிகப்படுத்த வேண்டும் போன்றவற்றை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
வருகிற மார்ச் மாதம் 5-ந் தேதி பெங்களூருவில் எங்களது சங்கங்கள் சார்பில் மாநாடு நடைபெற உள்ளது. மார்ச் மாதம் 15-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட லாம் என்று முடிவு செய்ய உள்ளோம்.
எனவே மாநில அரசும், மத்திய அரசும் அதற்குள் எங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி எங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.