ஊத்தங்கரை அருகே பயங்கரம்: வாலிபர் கழுத்தை அறுத்து கொலை யார் அவர்? போலீசார் விசாரணை
ஊத்தங்கரை அருகே வாலிபர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார். அவர் யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கிருஷ்ணகிரி:
ஊத்தங்கரை அருகே வாலிபர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார். அவர் யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வாலிபர் கொலை
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே அனுமன்தீர்த்தம்-பாவக்கல் பிரிவு சாலையில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் நேற்று கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து அவர்கள் ஊத்தங்கரை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் ஊத்தங்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.
மோப்பநாய்
கொலை செய்யப்பட்டு கிடந்த வாலிபரின் உடலில் பல்வேறு இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்தன. அவரது உடல் கிடந்த இடத்தின் அருகில் கேக் இருந்தது. அருகில் உள்ள புதரில் ஒரு செருப்பு ரத்தத்துடன் கிடந்தது. இதைத்தொடர்ந்து கிருஷ்ணகிரியில் இருந்து போலீஸ் மோப்ப நாய் பைரவி வரவழைக்கப்பட்டது.
அது கொலையான நபரின் உடலை மோப்பம் பிடித்து சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. அதேபோல கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை ஆய்வு செய்தனர்.
போலீசார் விசாரணை
கொலையான வாலிபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என தெரியவில்லை. அந்த இடத்தில் நடந்த பிரச்சினையில் அவரை யாரேனும் கொலை செய்தார்களா? அல்லது வேறு எங்காவது கொலை செய்து உடலை கொண்டு வந்து போட்டு சென்றார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கொலையுண்ட நபரின் உடல் பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது தொடர்பாக ஊத்தங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த கொலை சம்பவம் ஊத்தங்கரை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.