தண்ணீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை கிராம மக்கள் காலிக்குடங்களுடன் முற்றுகை

தண்ணீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை கிராமமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-02-26 17:57 GMT
சூளகிரி:
தண்ணீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை கிராமமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தண்ணீர் தட்டுப்பாடு
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஒன்றியம் பன்னப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட நரசாபுரம் மற்றும் புரணப்பள்ளி ஆகிய கிராமங்களில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றன. இந்த பகுதியில் கடந்த சில மாதங்களாக கடும் தண்ணீர் தட்டுப்பாடு இருந்து வருகிறது. இதனால் பொதுக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரியும், புதிதாக ஆழ்துளை குழாய் அமைத்து சீராக தண்ணீர் வினியோகம் செய்ய வலியுறுத்தியும், கிராம மக்கள் நேற்று காலிக்குடங்களுடன் சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி திடீரென அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பேச்சுவார்த்தை
இதையடுத்து வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட கிராமமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு காண அவர்கள் வலியுறுத்தினர்.   டிராக்டர் மூலம் தண்ணீர் வினியோகம் செய்யவும், விரைவில் பிரச்சினைக்கு தீர்வு காணவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதியளித்தார். இதையடுத்து கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்