2-வது நாளாக வேலைநிறுத்தம்: கோவையில் 70 சதவீத பஸ்கள் இயக்கப்படவில்லை
2-வது நாளாக போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்ததால் கோவையில் 70 சதவீத பஸ்கள் இயக்கப்படவில்லை.
கோவை
2-வது நாளாக போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்ததால் கோவையில் 70 சதவீத பஸ்கள் இயக்கப்படவில்லை. மேலும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தற்காலிக டிரைவர்களும் வேலைக்கு வராததால் பஸ்களை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
2-வது நாளாக வேலைநிறுத்தம்
அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்தத்தை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்று எல்.பி.எப், சி.ஐ.டி.யு. ஏ.ஐ.டி.யு.சி., ஐ.என்.டி.யு.சி. உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் அறிவித்து இருந்தனர். அதன்படி நேற்று முன்தினம் முதல் வேலைநிறுத்த போராட்டம் தொடங்கினர்.
கோவை மாவட்டத்தில் நேற்று 2-வது நாளாக வேலைநிறுத்தம் நடந்தது. இதனால் மாவட்டத்தில் உள்ள 855 பஸ்களில் 30 சதவீத பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. 70 சதவீத பஸ்கள் ஓடவில்லை.
பஸ்களை இயக்க முன்வரவில்லை
இதைத்தொடர்ந்து அரசு பஸ்களை இயக்க தற்காலிக டிரைவர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக அந்தந்த பகுதி வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் மூலம் கனரக வாகன ஓட்டுனர் லைசென்சு மற்றும் கண்டக்டர் லைசென்சு வைத்துள்ளவர்களை நேர்முக தேர்வுக்கு அழைத்து தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆனால் அவர்களில் சிலர் தான் வேலைக்கு வந்தனர்.
அப்படி வேலைக்கு வந்த தற்காலிக டிரைவர்கள் பஸ்களை இயக்க டெப்போவுக்கு சென்றபோது வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கத்தினர் தற்காலிக டிரைவர்களை வேலை செய்யக் கூடாது என்று கூறி தடுத்தனர்.
இதைத்தொடர்ந்து வேலைக்கு வந்த தற்காலிக டிரைவர்களும் நாங்களும் தொழிலாளர்கள் தான் என்று கூறி பஸ்களை இயக்க முன்வராமல் திரும்பி சென்று விட்டனர். இதனால் பஸ்களை இயக்க முடியாமல் போக்குவரத்து அதிகாரிகள் சிக்கலில் உள்ளனர்.
தள்ளுமுள்ளு
இந்த நிலையில் கோவை சுங்கம் பணிமனையில் இருந்து அ.தி.மு.க. தொழிற்சங்கத்தை சேர்ந்த டிரைவர் ஒருவர் பஸ்சை வெளியே கொண்டு போய் விட்டு சிறிது நேரத்தில் அதை நிறுத்த பணிமனைக்கு கொண்டு வந்தார்.
அப்போது வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு இருந்த தொழிற்சங்கத்தை சேர்ந்த ஒருவர் பஸ்சை ஓட்டி வந்த டிரைவரை கிண்டல் செய்தார். இதனால் அந்த டிரைவர் ஆத்திரம் அடைந்தார்.
இதுபற்றி தெரியவந்ததும் அங்கு திரண்ட அ.தி.மு.க. தொழிற்சங்கத்தினருக்கும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கத்தினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதையடுத்து அங்கு வந்த ரேஸ்கோர்ஸ் போலீசார் இரு தரப்பினரையும் சமாதானம் செய்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
விபத்து ஏற்பட வாய்ப்பு
இதுகுறித்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கத்தினர் கூறியதாவது:- அரசு பஸ்களை இயங்குவதாக கணக்கு காண்பிப்பதற்காக டெப்போவில் இருந்து பஸ்சை எடுத்துச் சென்று அதன் பின்னர் சிறிது நேரம் கழித்து அந்த பஸ்சை டெப்போவில் கொண்டு வந்து நிறுத்தி விடுகிறார்கள்.
பிறகு மற்றொரு பஸ்சை வெளியே எடுத்துச் சென்று மீண்டும் கொண்டு வந்து நிறுத்தி விடுகிறார்கள். மேலும் தற்காலிக டிரைவர்களை கொண்டு பஸ்களை இயக்குவது ஆபத்தானது. அரசு பஸ்களை நீண்ட நாட்களாக குறிப்பிட்ட டிரைவர்கள் ஓட்டியதால் அவர்களுக்கு அந்த பஸ்களின நிலை தெரியும்.
ஆனால் புதிதாக வரும் டிரைவர்களுக்கு அரசு பஸ்களின் நிலை தெரியாததால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அரசு உடனடியாக புதிய சம்பள ஒப்பந்தம் குறித்து பேச்சவார்த்தை நடத்தி பிரச்சினையை சுமூகமாக தீர்க்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
இதைத்தொடர்ந்து கோவையில் உள்ள அனைத்து போக்குவரத்து பணிமனை முன்பு வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பயணிகள் அவதி
கோவை மாவட்டத்தில் 70 சதவீத பஸ்கள் ஓடாததால் வேலைக்கு பஸ்சில் செல்பவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். மேலும் குறைந்த எண்ணிக்கையில் பஸ்கள் இயக்கப்பட்டதால் பஸ்களில் பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
மேலும் தனியார் பஸ்களிலும் பயணிகள் படிகளில் தொங்கியபடி பயணம் செய்ததை காணமுடிந்தது. பெரும்பாலான பஸ்கள் இயங்காததால் கோவை காந்திபுரம், உக்கடம், சிங்காநல்லூர், மேட்டுப்பாளையம் பஸ் நிலையங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
பஸ்கள் இயங்காததால் பஸ்சை நம்பி பயணம் செய்யும் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளானார்கள்.