கோவைப்புதூரில் பசுமாட்டை அடித்து கொன்ற சிறுத்தை

கோவைப்புதூரில் பசுமாட்டை சிறுத்தை அடித்து கொன்றது. இதையடுத்து சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2021-02-26 17:21 GMT
கோவை

கோவைப்புதூரில் பசுமாட்டை சிறுத்தை அடித்து கொன்றது. இதையடுத்து சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிறுத்தை நடமாட்டம்

மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள மதுக்கரை வனச்சரகத்தில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் மதுக்கரை பகுதியில் ஆடுகளை அடித்து கொன்ற சிறுத்தைப்புலியை வனத்துறையினர் பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர்.

ஆனால் கடந்த சில நாட்களாக மதுக்கரையையொட்டி உள்ள கோவைப்புதூர், அறிவொளிநகர் பகுதியில் தற்போது சிறுத்தை நடமாட்டம் அதிகரித்து வருகிறது.

பசுமாட்டை அடித்து கொன்றது

இந்த நிலையில் அறிவொளி நகரை சேர்ந்த விஜயகுமார் என்பவருக்கு சொந்தமான பசுமாடு, வனப்பகுதியையொட்டி உள்ள தனியார் நிலத்தில் சிறுத்தை கடித்து இறந்து கிடந்தது. இதுகுறித்து மாட்டின் உரிமையாளர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவல் அறிந்த மதுக்கரை வனச்சரகர் சீனிவாசன் தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சிறுத்தை அடித்து கொன்ற பசுமாட்டை பார்வையிட்டனர்.

தொடர்ந்து வனச்சரகர் சீனிவாசன் கூறுகையில், "பசுமாட்டை அடித்து கொன்றது சிறுத்தையாக இருக்கலாம் என்று தெரிகிறது. தொடர்ந்து இந்த பகுதியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. சிறுத்தை நடமாட்டம் உறுதியானால் கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.

கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை

இதுகுறித்த்து கோவைப்புதூர் மற்றும் அறிவொளிநகர் பகுதி மக்கள் கூறியதாவது:- இந்த பகுதியில் மாடு மற்றும் ஆடுகளை பலர் வளர்த்து பிழைப்பு நடத்தி வருகிறார்கள். 

தற்போது சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் இடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. எனவே சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்