சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு 100 நாட்களுக்கு இலவசமாக ‘நீட்’ பயிற்சி வகுப்புகள் - கமிஷனர் கோ.பிரகாஷ் தொடங்கி வைத்தார்
சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு 100 நாட்களுக்கு இலவசமாக ‘நீட்’ பயிற்சி வகுப்புகளை கமிஷனர் கோ.பிரகாஷ் தொடங்கி வைத்தார்.
சென்னை,
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 2020-21-ம் கல்வியாண்டில் படிக்கும் மாணவ-மாணவிகள் ‘நீட்’ தேர்வில் வெற்றி பெற்று, எம்.பி.பி.எஸ். பட்டப்படிப்பு படிக்கும் வாய்ப்பை பெறுவதற்காக ‘நீட் என்னால் முடியும்’ என்ற சிறப்பு திட்டத்தை சென்னை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-
எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்பிற்கான சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு அறிவித்ததன் அடிப்படையில் பெருநகர சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படித்து, நீட் தேர்வு எழுதிய 60 மாணவர்களில் 11 பேர் எம்.பி.பி.எஸ். படிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.
தற்போது 2020-21-ம் கல்வியாண்டில் அதிகப்படியான மாணவ-மாணவிகள் மருத்துவப்படிப்பில் சேரும் வகையில் தொண்டு நிறுவனங்கள் மூலமாக நீட் பயிற்சியை 100 நாட்களுக்கு இலவசமாக அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை பள்ளிகளில் படிக்கும் 100 மாணவ-மாணவிகளை தேர்வு செய்ய 2 இடங்களில் தகுதி தேர்வுகள் நடத்தப்பட்டது. இதில் 101 மாணவ-மாணவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தக்க வல்லுனர்களை கொண்டு 100 நாட்களுக்கு முழுமையாக நீட் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் இணை கமிஷனர் பி.என்.ஸ்ரீதர் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.