திருவள்ளூர் கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள்நுழைய முயன்ற அங்கன்வாடி பணியாளர்கள் - போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு
திருவள்ளூர் கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் நுழைய முயன்ற அங்கன்வாடி பணியாளர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூர்,
தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தின் சார்பில் அனைவருக்கும் காலமுறை ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு பணிக்கொடை ரூ.10 லட்சம், உதவியாளர்களுக்கு ரூ.5 லட்சம் பணிக்கொடை வழங்க வேண்டும், அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 22-ந் தேதி முதல் திருவள்ளூர் கலெக்டர் அலுவலக நுழைவாயில் முன்பு தொடர் போராட்டம் நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று 4-வது நாளாக 200-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் திடீரென கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் நுழைய முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அங்கன்வாடி பணியாளர்களை உள்ளே செல்ல விடாமல் தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும் அங்கன்வாடி பணியாளர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
தொடர்ந்து அங்கன்வாடி பணியாளர்கள் அனைவரும் மீண்டும் தங்கள் போராட்ட இடத்திற்கு சென்று தங்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.