கடைகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட வியாபாரிகள்
கடைகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தை வியாபாரிகள் முற்றுகையிட்டனர்.
திருவள்ளூர்,
திருவள்ளூர் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு நேற்று திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட சிறு வியாபாரிகள் திடீரென முற்றுகையிட்டு கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.
இது குறித்து அவர்கள் கூறியதாவது:-
நாங்கள் அனைவரும் வெங்கல் பஜார் பகுதியில் 50 ஆண்டுகளாக சிறு கடைகள் வைத்து பிழைப்பு நடத்தி வருகிறோம். இந்த நிலையில் கடந்த 8-ந்தேதி சாலை விரிவாக்கம் செய்ய போவதாக அதிகாரிகள் தெரிவித்து கடைகளை அகற்ற வேண்டும் என நோட்டீஸ் வழங்கினார்கள்.
அதிகாரிகள் அளித்த அந்த நோட்டீசில் தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில் இருந்து வெங்கல் வரை சாலை விரிவாக்கம் செய்வதாக தெரிவித்திருந்தனர். இதனால் சிறு வியாபாரிகளின் கடைகள் மற்றும் வீடுகளும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சாலை விரிவாக்கம் செய்தபோது அளவீடு செய்து அதிகாரிகள் இடங்களை அப்புறப்படுத்தினார்கள். தற்போது மீண்டும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இடத்தை அளவீடு செய்து கடைகளை அகற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
இதனால் வியாபாரிகள் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கும் நிலை உள்ளது. எனவே வெங்கல் பகுதியை சேர்ந்த சிறு வியாபாரிகள் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்காத வகையில் சாலை விரிவாக்க பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் முறையிட வந்ததாக அவர்கள் தெரிவித்தனர். பின்னர் அவர்கள் இது தொடர்பான புகார் மனுவை அங்கு இருந்த அதிகாரிகளிடம் கொடுத்து விட்டு கலைந்து சென்றனர்.