திருத்தணி ஆர்.டி.ஓ. அலுவலகம் முன்பு சாதி சான்றிதழ் வழங்கக்கோரி மாணவ- மாணவிகள் ஆர்ப்பாட்டம்
திருத்தணி ஆர்.டி.ஓ. அலுவலகம் முன்பு சாதி சான்றிதழ் வழங்கக்கோரி மாணவ-மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பள்ளிப்பட்டு,
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு வட்டம், திருத்தணி வட்டங்களை சேர்ந்த 11 கிராம மக்கள் பள்ளி மாணவ-மாணவிகள் உள்பட 500 பேர் நேற்று திருத்தணி ஆர்.டி.ஓ. அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சாதி சான்றிதழ் கிடைக்காததால் தங்களின் பிள்ளைகள் பள்ளி படிப்புக்கு உதவித்தொகை பெறுவதற்கும், வேலைவாய்ப்பில் முன்னுரிமை பெறுவதற்கும் வாய்ப்பில்லாமல் உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
ஆர்.டி.ஓ. அலுவலகத்தை சேர்ந்த ஆர்.டி.ஓ. உதவியாளர் மதி அவர்களை சந்தித்து ஆவன செய்வதாக உறுதியளித்தார். இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் 15 நாட்களுக்குள் தங்களுக்கு சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என்றும் அப்படி வழங்காவிட்டால் வருகிற சட்டமன்ற தேர்தலை தாங்கள் புறக்கணிக்க போவதாக தெரிவித்தனர். 11 கிராமங்களில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருவதாகவும் அவர்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டையை அரசிடம் திரும்ப ஒப்படைத்து தேர்தலை புறக்கணிக்க இருப்பதாக தெரிவித்தனர்.