கொண்டலாம்பட்டி அருகே முடிதிருத்தும் தொழிலாளி அடித்துக்கொலை
சேலம் கொண்டலாம்பட்டி அருகே ஈரோட்டை சேர்ந்த முடிதிருத்தும் தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டார்.;
கொண்டலாம்பட்டி:
சேலம் கொண்டலாம்பட்டி அருகே ஈரோட்டை சேர்ந்த முடிதிருத்தும் தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டார்.
அடித்துக்கொலை
சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள பூலாவரி ஆத்துக்காடு பகுதியில் ஊரடி முனியப்பன் கோவில் உள்ளது. அதன் அருகே உள்ள காட்டுப்பகுதியில் நேற்று பிற்பகல் சுமார் 32 வயதுடைய ஒருவர் தலையில் ரத்தக்காயங்களுடன் இறந்து கிடந்தார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் இதுகுறித்து உடனடியாக கொண்டலாம்பட்டி போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் அவரை மர்ம நபர்கள் கட்டையால் அடித்துக்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.
முடிதிருத்தும் தொழிலாளி
இதையடுத்து இறந்து கிடந்தவரின் சட்டைப்பையில் ஒரு சிறிய டைரி இருந்தது. அதை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். இதில் இறந்து கிடந்தவர் ஈரோடு மாவட்டம் வண்டிப்பேட்டை சென்னிமலை பகுதியை சேர்ந்த முடிதிருத்தும் தொழிலாளி மகாலிங்கம் (வயது 32) என்பது தெரியவந்தது.
மேலும் மகாலிங்கம் சேலம் பூலாவரி ஆத்துக்காடு பகுதியில் உள்ள உறவினர் மயில்சாமி என்பவருடைய வீட்டில் தங்கியிருந்து, அவருடைய முடிதிருத்தும் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் தான் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
போலீசார் விசாரணை
இந்த கொலை தொடர்பாக விசாரிப்பதற்காக போலீசார் மயில்சாமி வீட்டுக்கு சென்றனர். ஆனால் அவர் வீட்டில் இல்லை. இதனால் சந்தேகத்தின் பேரில் அவரை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் மகாலிங்கம் எதற்காக கொலை செய்யப்பட்டார், கொலை செய்தவர்கள் யார்? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.