திருச்சி மாவட்டத்தில் 70 சதவீத அரசு பஸ்கள் ஓடவில்லை
திருச்சி மாவட்டத்தில் 70 சதவீத பஸ்கள் ஓடவில்லை. பயணிகளுக்கான டிக்கெட் முன்பதிவு நிறுத்தப்பட்டது.
திருச்சி,
திருச்சி மாவட்டத்தில் 70 சதவீத பஸ்கள் ஓடவில்லை. பயணிகளுக்கான டிக்கெட் முன்பதிவு நிறுத்தப்பட்டது.
காலவரையற்ற வேலைநிறுத்தம்
14-வது ஊதிய ஒப்பந்தத்தை உடனே நிறைவேற்ற வேண்டும். நிலுவைத்தொகையை வழங்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கு பணப்பலனை தாமதமின்றி வழங்க வேண்டும், ஊழியர்களிடம் பிடித்தம் செய்த தொகையை திரும்ப வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்து தொடங்கினர்.
வேலை நிறுத்த போராட்டத்தில் தொ.மு.ச., சி.ஐ.டி.யு., எச்.எம்.எஸ்., ஏ.ஐ.டி.யு.சி., ஐ.என்.டி.யு.சி. உள்ளிட்ட 14 தொழிற்சங்கங்கள் ஈடுபட்டனர். இதன் காரணமாக திருச்சி மாவட்டத்தில் அரசு பஸ்கள் நேற்று அதிகாலை முதலே பெரும்பாலானவை ஓடவில்லை.
காலை 9 மணிவரை திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் அதிக அளவில் பஸ்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. அதே வேளையில் தனியார் பஸ்களே அதிக அளவில் வந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றன.
டிரைவர்களுக்குள் தகராறு
இதன் காரணமாக, அரசு மற்றும் தனியார் பஸ் டிரைவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. காலை 10 மணிக்கு மேல் அரசு போக்குவரத்து கழக பணிமனைகளில் இருந்து பஸ்கள் வெளியேறி திருச்சி மத்திய பஸ் நிலையத்திற்கு வந்தன.
அந்த பஸ்களில் பயணிகள் முண்டியடித்து கொண்டு சென்றனர். குறிப்பாக மதுரை, புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு பயணிகள் அதிக அளவில் சென்றன. சென்னைக்கு குறைந்த அளவிலேயே பஸ்கள் இயக்கப்பட்டன.
டவுன் பஸ்கள் இயங்கின
அதே வேளையில் நகர்ப்புறங்களில் ஓடக்கூடிய டவுன் பஸ்கள் வழக்கம்போல இயங்கின. திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து பெரும்பாலான டவுன் பஸ்கள் இயக்கப்பட்டன. அதே வேளையில் அங்கிருந்து அரியலூர், சிதம்பரம் உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் பஸ்கள் குறைந்த அளவே இயக்கப்பட்டன.
திருச்சி மண்டலத்திற்குட்பட்ட திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் 18 போக்குவரத்து பணிமனைகளில் டிரைவர்கள், கண்டக்டர்கள், பணிமனை ஊழியர்கள், மெக்கானிக் என 9,200 பேர் பணிபுரிகிறார்கள். அவர்களில் அதிகாரிகளை தவிர்த்து, அண்ணா தொழிற்சங்கம் தவிர்த்து இதர தொழிற்சங்கத்தில் உள்ளவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
70 சதவீதம் பஸ்கள்
18 பணிமனைகளில் இருந்து தினமும் 1,020 பஸ்கள் இயக்கப்படுவது வழக்கம். ஆனால், நேற்று 30 சதவீத பஸ்களே இயக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதன் மூலம் நேற்றைய முதல் நாளில் 70 சதவீதத்திற்கு மேல் பஸ்கள் இயக்கப்பட வில்லை என்று தொழிற்சங்க நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
இதுபோல் லால்குடி மாந்துறை பணிமனையில் 10 விரைவு பஸ்களும், 50 டவுன் பஸ்களும் இயங்கி வருகின்றன.
நேற்று வேலை நிறுத்தம் காரணமாக 18 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. இதனால் அரசு பஸ்களை நம்பியுள்ள அரசு ஊழியர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் தனியார் துறைகளில் வேலை செய்து வருபவர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
முன்பதிவு ரத்து
மேலும் இரவு பணி முடிந்து வீடு திரும்ப முயன்ற சில டிரைவர்கள், கண்டக்டர்கள் தொடர்ச்சியாக வேலைபார்க்க பணிக்கப்பட்டனர். அவர்கள் தொடர்ச்சியாக பணி செய்ய நேர்ந்தது. மேலும் இந்த போராட்டம் காரணமாக திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் நீண்ட தூர ஊர்களுக்கு செல்லும் பயணிகள், டிக்கெட் முன்பதிவு செய்வது நிறுத்தப்பட்டது.
இது குறித்து அரசு போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், போக்குவரத்து தொழிற்சங்கத்தினரின் வேலைநிறுத்தம் காரணமாக காலையில் பணிமனைகளில் இருந்து பஸ்களை எடுத்து செல்வதில் சற்று சிரமம் ஏற்பட்டது. பின்னர் மாற்று டிரைவர்கள், கண்டக்டர்கள் கொண்டு பிற்பகலுக்கு மேல் அதிக அளவில் பஸ்கள் தடையின்றி இயக்கப்பட்டன’ என்றார்.