மேட்டூர் அணை உபரிநீரை ரூ.565 கோடியில் 100 வறண்ட ஏரிகளுக்கு வழங்கும் திட்டம் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார்
மேட்டூர் அணையின் உபரிநீரை ரூ.565 கோடியில் 100 வறண்ட ஏரிகளுக்கு வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார்.
சேலம்:
மேட்டூர் அணையின் உபரிநீரை ரூ.565 கோடியில் 100 வறண்ட ஏரிகளுக்கு வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார்.
நீர் வழங்கும் திட்டம்
மேட்டூர் அணையின் வெள்ள உபரிநீரை மேட்டூர், ஓமலூர், எடப்பாடி மற்றும் சங்ககிரி ஆகிய தொகுதிகளில் உள்ள 100 வறண்ட ஏரிகளுக்கு ரூ.565 கோடி மதிப்பீட்டில் நீரேற்று மூலம் நீர் வழங்கும் திட்டத்தை அறிவித்து கடந்த ஆண்டு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பணியை தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து மேட்டூர் அருகே திப்பம்பட்டியில் பிரதான நீரேற்று நிலையம், வெள்ளாளபுரம் மற்றும் கண்ணந்தேரி ஏரிகள் துணை நீரேற்று நிலையம் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வந்தன.
மேட்டூர் அணையின் வெள்ள உபரிநீரை கால்வாய் மூலம் திப்பம்பட்டி பிரதான நீரேற்று நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து எம்.காளிப்பட்டி ஏரி துணை நீரேற்று நிலையம், வெள்ளாளபுரம் ஏரி துணை நீரேற்று நிலையம், கண்ணந்தேரி ஏரி துணை நீரேற்று நிலையம் ஆகியவற்றுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படும்.
இன்று தொடக்க விழா
இந்தநிலையில், திட்டப்பணிகள் முடிவடைந்த நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 7.30 மணியளவில் அதன் தொடக்க விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேட்டூர் அணை திப்பம்பட்டியில் இன்று விழா நடைபெறுகிறது. இந்த விழாவில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு மேட்டூர் அணை உபரிநீரை ரூ.565 கோடியில் வறண்ட 100 ஏரிகளுக்கு நீரேற்று மூலம் நீர் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து மக்களுக்கு அர்ப்பணிக்கிறார்.
விழாவில் எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க தலைவர்கள், அரசு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர். முதல்-அமைச்சர் வருகையையொட்டி மேட்டூர் அணை பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இத்திட்டத்தால் மொத்தம் 4 ஆயிரத்து 240 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுவதோடு, 48 கிராமங்களின் குடிநீர் தேவை பூர்த்தி அடைந்து, நிலத்தடி நீர்மட்டம் உயரும். இதனால் விவசாயம், கால்நடைகள் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்கள் மேன்மையடையும். மேலும், மக்களின் பொருளாதார நிலை உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நேற்று இரவு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோவையில் இருந்து கார் மூலம் சேலம் வந்தார். மாவட்ட எல்லையான சங்ககிரியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, கலெக்டர் ராமன் மலர்கொத்து கொடுத்து வரவேற்றார். அப்போது போலீஸ் சூப்பிரண்டு தீபாகனிக்கர் உள்பட அதிகாரிகள் உடன் இருந்தனர்.