திருச்சியில் பிரிந்து வாழும் மனைவியிடம் ரூ.2 கோடி கேட்டு மிரட்டியதாக டாக்டர் மீது போலீஸ் வழக்கு

திருச்சியில் பிரிந்து வாழும் மனைவியிடம் ரூ.2 கோடி கேட்டு மிரட்டியதாக டாக்டர் மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

Update: 2021-02-25 22:05 GMT
திருச்சி, 
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

டாக்டர் மீது புகார்

திருச்சி காஜாமலை ரேஸ்கோர்ஸ் சாலை பகுதியில் வசித்து வருபவர் ஜமால் முகமது ஜாபர். இவரது மகள் ஜாக்ரீன் (வயது 26). இவருக்கும் புத்தூர் மூலக்கொல்லை தெருவை சேர்ந்த அப்துல் குத்தூஸ் மகன் டாக்டர் அசாருதீன் (30) என்பவருக்கும் கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் நடந்தது.

தற்போது இவர்கள் பிரிந்து வாழ்கிறார்கள். இந்நிலையில் ஜாக்ரீன், அசாருதீன் மீது ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்து உள்ளார். 

அந்த மனுவில் திருமணத்தின்போது தனது பெற்றோர் 125 பவுன் நகைகள் மற்றும் ரூ.10 லட்சம் மதிப்புள்ள வீட்டு உபயோக பொருட்களை வரதட்சணையாக கொடுத்தார்கள். ஆனால் அசாருதீன், அவரது தந்தை அப்துல் குத்தூஸ், தாயார் சகிலா பேகம், சகோதரி தஸ்லீம் பானு ஆகியோர் மேலும் ரூ.2 கோடி வரதட்சணை கேட்டு தன்னை மிரட்டுவதாக குறிப்பிட்டு உள்ளார். 

அசாருதீன் தனது அந்தரங்க படங்களை பதிவேற்றம் செய்து சமூக வலைத்தளங்களில் பரவ விட்டு விடுவேன் என மிரட்டுவதாகவும், அறுவை சிகிச்சை செய்ய பயன்படுத்தும் கத்தியால் தன்னை கொலை செய்துவிடுவதாக மிரட்டியதாகவும் கூறி உள்ளார்.

வழக்குப்பதிவு

இதுதொடர்பாக ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயா, புகார் கூறப்பட்ட அசாருதீன் மற்றும் அவரது தந்தை, தாய், சகோதரி ஆகிய 4 பேர் மீதும் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்