கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்
கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர், வேப்பந்தட்டை, குன்னம், ஆலத்தூர் ஆகிய தாலுகா அலுவலகங்கள் முன்பு, அந்தந்த வட்ட கிளையின் சார்பில் தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர் சங்கத்தினர், 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முன்தினம் மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று 2-வது நாளாக பெரம்பலூர் வருவாய் கோட்ட சப்-கலெக்டர் அலுவலகம் முன்பு மாலையில் பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் செயலாளர் பிச்சை தலைமை தாங்கினார். தலைவர் சேகர், பொருளாளர் பாலசந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட கிராம உதவியாளர்கள், தங்களுக்கு காலமுறை ஊதியம் நான்காம் நிலை ‘டி' பிரிவில் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். பதவி உயர்வு 10 ஆண்டு என்பதை 6 ஆண்டுகளாக குறைக்க வேண்டும். பதவி உயர்வை 50 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இன்று (வெள்ளிக்கிழமை) மாலை பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பும் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக கிராம உதவியாளர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.