9, 10, 11-ம் வகுப்பு படிப்பவர்கள் அனைவரும் தேர்ச்சி அறிவிப்பு குறித்து மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் கருத்து
9, 10, 11-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்ற அறிவிப்பு குறித்து மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் கருத்து தெரிவித்தனர். அப்போது நன்றாக படிப்பவர்களுக்கு இந்த அறிவிப்பு ஏமாற்றத்தை தந்ததாக தெரிவிக்கப்பட்டது.
பெரம்பலூர்:
அனைவரும் தேர்ச்சி
கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டன. ஊரடங்கு தளர்விற்கு பின்னர் இந்த ஆண்டு பொதுத் தேர்வெழுதும் 12 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி மாதத்திலும், 9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி மாதத்திலும் பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்த நிலையில் நேற்று காலை தமிழக சட்டசபையில் 110 விதியின் கீழ் தமிழகத்தில் 9, 10, 11-ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் தேர்வின்றி அனைவரும் தேர்ச்சி பெற்றதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இந்த தகவலை நேற்று மதியம் அறிந்த பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்ட பள்ளிகளில் 9, 10, 11-ம் வகுப்புகளில் படிக்கும் மாணவ-மாணவிகள் மகிழ்ச்சி அடைந்தனர். சில மாணவ-மாணவிகள் உற்சாகத்தில் துள்ளி குதித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
மேலும் இது குறித்து பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அது பற்றிய விவரம் வருமாறு;-
ஏமாற்றம்
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர் ராகேஷ்:-
கொரோனா ஊரடங்கு காரணமாக அரசின் உத்தரவினால் ஏற்கனவே 9-ம் வகுப்பு தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி அடைந்தேன். தற்போது 10-ம் வகுப்புக்கும் பொதுத் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பு வெளியிட்ட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு மாணவர்கள் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவி அசின்:-
பொதுத்தேர்வின்றி 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசின் அறிவிப்பு படிப்பில் சிறந்து விளங்கும் மாணவ-மாணவிகளுக்கு பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தும். பொதுத் தேர்வு வைக்கப்பட்டிருந்தால் நல்ல மதிப்பெண்களை பெற முடிந்திருக்கும்.
அரசு பள்ளி 9-ம் வகுப்பு மாணவி சகுந்தலா:-
மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு சில வாரங்களே ஆன நிலையில், இந்த ஆண்டும் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவித்த அரசின் அறிவிப்பு மாணவ-மாணவிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், இந்த அறிவிப்பு நன்றாக பயிலக்கூடிய மாணவ-மாணவிகளுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது.
அடுத்த வகுப்பிற்கான பாடங்களை...
தனியார் பள்ளி 11-ம் வகுப்பு மாணவர் கார்த்திக்ராஜா:-
ஏற்கனவே 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதாமலேயே மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவித்தது. தற்போது 11-ம் வகுப்புக்கும் பொதுத் தேர்வின்றி தேர்ச்சி என்ற அறிவிப்பு மாணவர்கள் மத்தியில் வரவேற்பை பெறலாம். 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தற்போது இருந்தே தயாராக வேண்டும்.
சத்திரமனை அரசு மேல்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியரும், தாவரவியல் ஆசிரியருமான காமராஜ்:-
மாணவர்கள் நலன் கருதி 9, 10, 11-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவித்த தமிழக அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. இதனால் மாணவ-மாணவிகள் உற்சாகம் அடையாமல், தொடர்ந்து பொது அறிவினை வளர்த்து கொள்ள வேண்டும். அடுத்த வகுப்பிற்கான பாடங்களை தற்போது இருந்தே படிக்க தொடங்க வேண்டும்.
வருத்தம் அளிக்கிறது
அரியலூர் மாவட்டம் காரைக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவி சங்கவி:-
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைத்து மாணவ, மாணவிகளும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் என்னை பொறுத்த அளவில் நான் தேர்வு எழுதவே விரும்பினேன். தேர்வு எழுதி இருந்தால் எங்களது உண்மையான மதிப்பெண் வெளிப்பட்டிருக்கும்.
அரசு மேல்நிலைப்பள்ளி 11-ம் வகுப்பு மாணவர் வெற்றிவேல்:-
தேர்வை நடத்தியிருந்தால், அதிக மதிப்பெண்கள் பெற முயற்சி செய்திருப்போம். எங்கள் திறமையை வெளிப்படுத்துவதற்கே தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த ஆண்டு தேர்வு நடத்தப்படாதது மாணவ, மாணவிகளுக்கு வருத்தம் அளிக்கிறது.
பள்ளி ஆசிரியர் கலையரசன்:-
தேர்வுக்கு குறுகிய கால அவகாசமே உள்ளது. தேர்வை ரத்து செய்தது சுமாராக படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு மகிழ்ச்சியை அளித்தாலும், நல்ல மதிப்பெண்கள் பெற்று பல்வேறு உயர் படிப்புகளுக்கு செல்ல வேண்டும் என்று நினைக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஏமாற்றமாகவே அமையும். ஆனாலும் பல்வேறு இடர்பாடுகளுக்கு மத்தியில் அரசு எடுத்திருக்கும் இந்த முடிவு வரவேற்கத்தக்கது.
நாயகனைப்பிரியாள் அரசு மேல்நிலைப்பள்ளியின் 9-ம் வகுப்பு மாணவி ஆந்தோ லவீனா:-
தேர்வு நடத்தாமல் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் முழுத்தேர்ச்சி அளித்த அரசின் அறிவிப்புக்கு நன்றி. இருப்பினும் தேர்வு எழுதுவதற்கு முழுமையாக தயாராகி வந்த நிலையில், தேர்வு ரத்து என்ற அறிவிப்பு ஏமாற்றத்தையே அளிக்கிறது.
மகிழ்ச்சி அளிக்கிறது
மீன்சுருட்டி பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் 10-ம் வகுப்பு மாணவி கங்கா:-
கடந்த சில நாட்களாகத்தான் பள்ளிகள் திறக்கப்பட்டு எங்களுடைய வகுப்பு ஆசிரியர்கள் பாடங்கள் நடத்தி வருகின்றனர். எனவே மாணவர்களின் மேல் அக்கறை கொண்டு 9, 10 மற்றும் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்ற அறிவிப்பால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தோம்.
முத்துசேர்வாமடம் அரசு உயர்நிலைப்பள்ளி 10-ம் வகுப்பு மாணவி கவிதா:-
அரசு அறிவித்த 60 சதவீத பாடத்திட்டம் மட்டுமே இந்த ஆண்டு ஆசிரியர்களால் எங்களுக்கு நடத்தப்பட்டு வருகிறது. இன்னும் சில நாட்களில் பொதுத்தேர்வு நடத்தப்பட இருந்த நிலையில், அனைவரும் தேர்ச்சி என்ற அறிவிப்பு அளவில்லாத மகிழ்ச்சியை அளிக்கிறது.
மீன்சுருட்டி அரசு மேல்நிலைப்பள்ளி 9-ம் வகுப்பு மாணவி பரமேஸ்வரி:-
மாணவர்களின் உணர்வை புரிந்து அனைவரும் தேர்ச்சி என்று அறிவித்த முதல்-அமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.