தாலுகா அலுவலகம் முன் இந்து முன்னணியினர் காத்திருப்பு போராட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி தாலுகா அலுவலகம் முன் இந்து முன்னணியினர் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் செந்துறை சாலையில் உள்ள மீனாம்படி சுடுகாடு ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரியும், நீண்ட நாள் கோரிக்கையான ராஜேந்திர சோழனுக்கு சிலை அமைத்து தர வேண்டும் என்றும், புதுச்சாவடி கிராமத்தில் ஏரி நீர் புறம்போக்கு வரத்து வாய்க்கால்களை ஆக்கிரமித்து கட்டியுள்ள வீடுகளை அப்புறப்படுத்த வேண்டும், காமாட்சியம்மன் கோவில் ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து முன்னணியினர் தாலுகா அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு மாநில செயற்குழு உறுப்பினர் பாலமுருகன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் பழனிச்சாமி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக திருச்சி கோட்டப் பொறுப்பாளர் குணா கலந்து கொண்டு கண்டனம் தெரிவித்து பேசினார். இதில் நகர தலைவர் மணி, ஆண்டிமடம் ஒன்றிய தலைவர் மனோகரன், தா.பழூர் ஒன்றிய செயலாளர் வெற்றிசெல்வன் மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து தாசில்தார் கலைவாணன், போலீஸ் துணை சூப்பிரண்டு தேவராஜ், இன்ஸ்பெக்டர் ஜெயராமன், சப்-இன்ஸ்பெக்டர் வசந்த், வருவாய் ஆய்வாளர் ஸ்ரீதேவி, திருச்சி- சிதம்பரம் சாலை விரிவாக்க தொடர்பு அலுவலர் செந்தில் உள்ளிட்ட அதிகாரிகள் வந்து, இந்து முன்னணியினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்களின் கோரிக்கை குறித்து மேல் அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து இந்து முன்னணியினர் காத்திருப்பு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.