கரிமேடு மீன் மார்க்கெட் திறக்கப்படுமா?
மதுரை கரிமேடு பகுதியில் அமைந்துள்ள மீன் மார்க்கெட் மாநகராட்சி தடை காரணமாக திறக்கப்படாததால் மீன் வியாபாரிகள் சாலையில் கடைகளை அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.;
மதுரை, பிப்.
மதுரை கரிமேடு பகுதியில் அமைந்துள்ள மீன் மார்க்கெட் மாநகராட்சி தடை காரணமாக திறக்கப்படாததால் மீன் வியாபாரிகள் சாலையில் கடைகளை அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.
மீன் மார்க்கெட்
மதுரை கரிமேடு பகுதியில் மீன் மார்க்கெட் நீண்ட காலமாக இயங்கி வருகிறது. இந்த மார்க்கெட் மாநகராட்சியால் தனியாருக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. இந்த மார்க்கெட்டிற்கு தூத்துக்குடி, ராமேசுவரம் உள்பட பல்வேறு இடங்களில் பிடிக்கப்படும் உள்நாட்டு மற்றும் கடல் மீன்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. மதுரையின் மேற்குப் பகுதியில் வசிக்கும் சிறு வியாபாரிகளும், மக்களும் மீன் வாங்குவதற்கு இங்கு தான் வருகின்றனர். இதனால் இந்த மீன் மார்க்கெட் எப்போதும் பரபரப்புடன் காணப்படும்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு தொடங்கிய கொரோனா பாதிப்பு காரணமாக இந்த மார்க்கெட் மூடப்பட்டது. தற்போது வரை கொரோனா தொற்று பயம் காரணமாக இந்த மார்க்கெட்டை திறக்க மாநகராட்சி நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை. இதன் காரணமாக இந்த மார்க்கெட்டை நம்பி இருக்கும் ஆயிரக்கணக்கான சில்லறை வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது இவர்களில் பலர் வேறு வழியின்றி அந்த பகுதியில் சாலை ஓரத்தில் மீன் விற்பனை கடைகளை தொடங்கியுள்ளனர்.
திறக்க கோரிக்கை
இது குறித்து, மீன் வியாபாரிகள் சிலர் கூறியதாவது:-
தற்போது கரிமேடு மீன் மார்க்கெட் இருக்கும் பகுதி மிகவும் நெருக்கடியாக மக்கள் குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ளது. இங்கு அன்றாடம் நூற்றுக்கணக்கான லாரிகளும், பல ஆயிரக்கணக்கான பொதுமக்களும் வந்து செல்வதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் இருந்து வருகிறது.
இந்த நிலையில், கொரோனா பரவல் அச்சம் இருப்பதால் இந்த மீன் மார்க்கெட்டை திறப்பது சரியானதல்ல தான். இருந்தாலும், நலிவுற்ற சில்லறை வியாபாரிகள் மீள இந்த மீன் மார்க்கெட்டை உடனே திறக்க வேண்டும். மாநகராட்சி இந்த மார்க்கெட்டை வேறு பகுதிக்கு மாற்ற ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றியது. ஒரு சில மாதங்களுக்கு பிறகு இந்த மீன் மார்க்கெட்டை நகரின் வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும்.
குத்தகைக்கு விடக்கூடாது
இதனை விரைவாக செய்வதன் மூலம், தற்போது தொழில் இல்லாமல் பாதிப்படைந்த மீன் வியாபாரிகள் பாதிப்பில் இருந்து மீள முடியும். மேலும் இங்கு வரும் மீன் லாரிகளில் இருந்து இறக்கும் ஒரு பெட்டிக்கு 10 ரூபாய், மீன் வெட்டுவோருக்கு 50 ரூபாய் கட்டணம் என்று பல லட்சம் ரூபாய் வசூலாகிறது. இந்த வருவாய் முழுமையாக அரசுக்கு சேரும் வகையில், இந்த மார்க்கெட்டை மாநகராட்சி குத்தகைக்கு விடாமல் மாநகராட்சி நிர்வாகமே ஏற்று நடத்த வேண்டும்" என்றனர்.