குரூப்-4 தேர்வு முறைகேடு ஆவணங்களை பாதுகாக்க உத்தரவு

குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் பாதுகாக்க வேண்டும் என்று சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2021-02-25 20:40 GMT
மதுரை, பிப்.
குரூப்-4 தேர்வு முறைகேடு தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் பாதுகாக்க வேண்டும் என்று சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
குரூப்-4 தேர்வு முறைகேடு
மதுரையைச் சேர்ந்த வக்கீல் முகமது ரஸ்வி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
தமிழகத்தில் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வை மாநிலம் முழுவதும் 16 லட்சம் பேர் எழுதினர். இந்த தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டபோது, ராமேசுவரத்தில் குறிப்பிட்ட மையங்களில் தேர்வு எழுதியவர்கள் முதல் நூறு இடங்களில் வெற்றி பெற்றது தெரியவந்தது. ஒரே தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய அனைவரும் தேர்ச்சி பெற்று இருந்தது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
இந்த முறைகேட்டில் உயர் அதிகாரிகள் உள்பட ஏராளமானவர்களுக்கு தொடர்பு இருக்கிறது. தற்போது இந்த விவகாரம் குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் தனிப்படை அமைத்து விசாரித்து வருகின்றனர். 
ஆனால் இந்த அமைப்பு இந்த வழக்கை விசாரித்தால் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் தப்பிக்க வாய்ப்பு உள்ளது. எனவே டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு முறைகேடு வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்.
 இவ்வாறு அவர் மனுவில் கூறியிருந்தார்.
உத்தரவு
இந்த வழக்கு ஏற்கனவே நிலுவையில் இருந்தது. தற்போது தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி ஹேமலதா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. முடிவில், குரூப்-4 முறைகேடு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைப்பற்றிய ஆவணங்களை பாதுகாப்பாக வைக்க வேண்டும். அதுதொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். 
பின்னர் வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

மேலும் செய்திகள்