சட்டசபை தேர்தலை முன்னிட்டு பதற்றமான பகுதிகளை அதிகாரிகள் ஆய்வு மூலம் கண்டறிய வேண்டும் கலெக்டர் கார்த்திகா உத்தரவு

சட்டசபை தேர்தலை முன்னிட்டு தர்மபுரி மாவட்டத்தில் பதற்றமான பகுதிகளை அதிகாரிகள் ஆய்வின் மூலம் கண்டறிய வேண்டும் என்று கலெக்டர் கார்த்திகா உத்தரவிட்டார்.

Update: 2021-02-25 19:37 GMT
தர்மபுரி,

தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள சட்டசபை பொதுத்தேர்தலை முன்னிட்டு தர்மபுரி மாவட்டத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறையின் மூலம் தேர்தல் செலவை கண்காணிக்கவும், தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் செய்யவேண்டிய பணிகள் குறித்த அதிகாரிகள் ஆய்வுக்கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் கார்த்திகா தலைமை தாங்கினார். உதவி கலெக்டர் பிரதாப், ஆய உதவி ஆணையர் தணிகாசலம், டாஸ்மாக் மாவட்ட மேலாளர் கேசவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில் கலெக்டர் கார்த்திகா பேசியதாவது:- தமிழக சட்டசபை பொதுத்தேர்தலை முன்னிட்டு தர்மபுரி மாவட்டத்தின் எல்லைப்புற பகுதிகளில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் மூலம் சோதனைச்சாவடிகள் அமைத்து கண்காணிக்க வேண்டும். சட்ட விரோத செயல்கள் மற்றும் மதுவிலக்கு குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க வேண்டும்.

பென்னாகரம் தாலுகா பகுதியை ஒட்டியுள்ள கர்நாடக மாநில எல்லை பகுதிகளில் கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையில் இருந்து சாலை வழியாக பென்னாகரம் தாலுகாவுக்கு வரும் வாகனங்கள் ஊட்டமலை கிராமத்தில் ஏற்கனவே உள்ள காவல்துறை சோதனைச்சாவடி மூலம் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும். கர்நாடக மாநில பகுதியிலிருந்து பரிசல் மூலம் மதுபானங்கள் சட்டவிரோதமாக கடத்தப்படாமல் தடுக்க மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு மதுபான கடைகள் செயல்படும் நேரம் தவிர்த்து பிற நேரங்களில் அரசு மதுபானங்களை சட்டவிரோதமாக பெட்டிக்கடைகள், சந்து கடைகளில் விற்பனை செய்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கள்ளத்தனமாக மது விற்பனையை முழுமையாக தடுக்க வேண்டும். டாஸ்மாக் மதுக்கடைகளில் கடந்த ஆண்டு விற்பனை உடன் ஒப்பிட்டு வழக்கமான தினசரி விற்பனையில் இருந்து 30 சதவீதம் அதிகரிக்கும் மதுக்கடைகளை தணிக்கை செய்து உரிய விவரங்களை அறிக்கையாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனுப்பவேண்டும். 

வெளிமாநில மது பானங்கள் தர்மபுரி மாவட்டத்தில் கடத்தப்படுவதை தடுக்க வேண்டும். பதற்றமான பகுதிகள் ஏதேனும் உள்ளதா? என்பதை ஆய்வின் மூலம் கண்டறிய வேண்டும். பென்னாகரம் தாலுகாவில் வேறு சோதனை சாவடிகள் அமைக்கப்பட வேண்டுமா? என்பது குறித்து நேரடி ஆய்வு நடத்தி 3 நாட்களுக்குள் மாவட்ட நிர்வாகத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் பேசினார். இந்த கூட்டத்தில் மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டுராஜா சோமசுந்தரம், போலீஸ் இன்ஸ்பெக்டர் கோமளவள்ளி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் முருகேசன், பழனி, சிவகுமார், சுந்தரேசன், மணி உள்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்